இந்தியா மீண்டும் பாதைக்கு திரும்புகிறது: சீர்திருத் தத்துக்கான செயல் திட்டம்’ என்ற சீர்திருத்தங்கள் குறித்த புத்தக வெளியீட்டுவிழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால் ஆற்றல், அளவு, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தான். இந்த மனிதவளத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களது ஆற்றலை மேம்படுத்துவது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

இன்றைய சமூகத்தில் நல்ல ஆசிரியர்கள் மிகப் பெரிய தேவையாக இருக்கிறார்கள். ஆனால் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

நமது தேசியக் கொடியை எடுத்து கொள்ளுங்கள். பச்சை நிறம், இரண்டாவது பசுமைப் புரட்சியை இந்தியா கொண்டு வரவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த இரண்டாம் பசுமைப் புரட்சி, வேளாண் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்குதல், மதிப்புகூட்டுதல், வேளாண் தொழில்நுட்பம், சேமிப்புக் கிடங்கை பன்முகப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

வெள்ளை நிறம், வெண்மை புரட்சியை எடுத்துக் காட்டுகிறது. இது பால் உற்பத்தியை பெருக்க வேண்டும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

காவி நிறம், நமது ஆற்றலை வெளிப் படுத்துகிறது. நாட்டுக்கு காவிப் புரட்சியும் தேவைப்படுகிறது. இந்தியாவின் வளர்ந்துவரும் மின் சக்தி தேவையை சந்திக்க ஏற்றவிதத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெருக்குதல், சூரிய மின் சக்தியைப் பெருக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

உள்கட்டமைப்பு அபிவிருத்தி என்பது நெடுஞ்சாலையிலிருந்து மின் பாதைக்கு திரும்ப வேண்டும். கண்ணாடி இழை நெட்வொர்க்கிற்கு திரும்ப வேண்டும்.

பழங்காலத்தில் நதிக்கரைகளில் நகரங்கள் அமைக்கப்பட்டன. தற்போது நெடுஞ்சாலைகளை யொட்டி நகரங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் எதிர் காலத்தில் கண்ணாடி இழை கேபிள் நெட்வொர்க் மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு வசதிகளைச் சார்ந்து நகரங்கள் உருவாக்கப்படும்

தேசியக் கொடியில் அசோகசக்கரம் நீல நிறத்தில் உள்ளது. இது மீன் வளத்தைப் பெருக்கவேண்டும் என்பதை காட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பணியில் கவனம் செலுத்தவேண்டும்.

நாம் வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டுமானால், மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால், 100 மிடுக்கான நகரங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.