பார்லி., இரு அவைகளின் கூட்டு குழு கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். இந்த உரையில், மோடி தலைமையிலான புதியரசு செயல்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பொருளாதாரவளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணம் மீட்பு,

கட்டமைப்பு , வேலை வாய்ப்பு, வளர்ச்சி பணிகள் , கிராமப் புற முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்,புதிய அரசு ஏழைகளுக்கான அரசாக இருக்கும் என்றும், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உரையின் போது குறிப்பிட்டார்.

இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசியதாவது:
ஜனநாயகத்தின் தேர்தல் மூலம் நிலையான அரசு வேண்டும் என மக்கள் ஓட்டளித்துள்ளனர். இந்தியாவில் தற்போது வலுவான ஆட்சி தேவைப் படுகிறது என்பதை உணர்த்தியுள்ளனர். புதிய அரசுக்கும் , சபாநாயகருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். எனது அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஊழல்கள் என்பதற்கு இந்த அரசில் இடமில்லாமல் இருக்கவேண்டும். புதிய அரசு மக்களின் அனைத்து எதிர் பார்ப்புகளையும், எண்ணத்தையும் நிறைவேற்றும். வறுமையை ஒழிக்க நமது அரசு பாடுபடும். அனைவரது உரிமையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசு செயல்படும். உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். வேளாண் துறையில் அதிக முதலீடு செய்யப்படும். அனைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

அனைவருக்கும் உணவு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படும். பொதுவிநியோகத்தில் சீரமைப்பு கொண்டு வரப்படும். பஞ்சாயத்ராஜ் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். கிராமப்புற குடிநீர் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராமம், நகர்ப்புறம் என்ற பிரிவினை நீக்கப்படும். உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே அரசின் முதல் பணியாக இருக்கும்.

புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும். அனைத்து பள்ளிகளும் இணையதளத்தில் இணைக்கப்படும். சிறிய அரசு , சிறந்த நிர்வாகம் ( மினிமம் கவர்மென்ட், மேக்ஸிமம் கவர்னன்ஸ் ) என்ற கொள்கையுடன் செயல்படும். விளையாட்டு துறை மேம்படுத்தப்டும். பயிர் மற்றும் விசாயம் காத்திட புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதிய சுகாதார கொள்கை உருவாக்கப்படும், யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்கள் திறம் முழுமையாக பயன்படுத்தப்படும். தேசிய விளையாட்டு ஆணையம் அமைத்து கிராமப்புற மாணவர்கள் தரம் உயர்த்தப்படும். சிறுபான்மையினருக்கு சம அதிகாரம், அனைவரும் இணையாக நடத்தப்படுவர். இ கவர்னன்ஸ் முழு அளவில் செயல்படுத்தப்படும். நீர் பாதுகாப்பு அவசியமாக இந்த அரசு கருதுகிறது. நதி நீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

கறுப்புப்பணம் மீட்டு கொண்டு வர புதிய சிறப்பு குழு அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பொது இடங்களில் ஒய்-பை என்ற நெட் தொடர்பு உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். அணு உலை மற்றும் அணு சக்தி பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். வைர நாற்கர திட்டம் மூலம் அதிவேக ரயில் சேவை கொண்டு வரப்படும். வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாக நேரடி அன்னிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி பேசினார்.

குடியரசுத் தலைவர் உரை முக்கிய அம்சங்கள்:

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

பாஜக அரசின் தாரக மந்திரம் ‘சிறிய அரசாங்கம் செம்மையான அரசாட்சி’ என்பதாக இருக்கும்.

பொது விநியோகத் திட்டத்தில் மறு சீரமைப்பு கொண்டு வரப்படும்.

வறுமையை குறைப்பதை இலக்காகக் கொண்டு புதிய அரசு செயல்படும்.

அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும்.

இந்திய எல்லையில் ஊடுருவலை தடுக்க அரசு முன்னுரிமை வழங்கும்.

உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

ஆந்திரா, தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளை செய்யும்.

விளையாட்டுத் துறை ஊக்குவிக்கப்படும். தேசிய விளையாட்டு திறன் கண்டறியும் மையம் அமைக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை அரசு பொறுத்துக் கொள்ளாது. பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க அரசு வழிவகை செய்யும்.

மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரையும் அரசு சரிசமமாக நடத்தும்.

கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும்

மதரஸாக்களை நவீனப்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.

பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுடனான நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொருளாதாரத்தை சீர் படுத்துவதே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை.

நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும். வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்படும்.

அதிவேக விரைவு ரயில் திட்டத்தை மேம்படுத்த ‘வைர நாற்கரம்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப்படுத்தப்படும்.

வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.

சிறு துளி நீரும் பெரும் மதிப்படையது. நீர் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதான் மந்திரி கிரிஷி சஞ்சாய் யோஜனா செயல்படும்.

இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை அமைக்கப்படும்.

நீதித்துறை மேம்பாட்டிற்காக நீதிமன்றங்களை மேம்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.

தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிகை எடுக்கப்படும்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

நிலக்கரி, கனிமங்கள், அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு தெளிவான நெறிமுறைகளை அரசு வகுக்கும்.

மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சீரமைக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்களுக்கு வேலை தொடர்பான ஆலோசனையும், பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தேசிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும். மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தீவிரவாதம், வன்முறை, கலவரங்கள், போதைப் பொருள் கடத்தல், சைபர் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

கடலோர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் உணர்ந்திருப்பதால் தேசிய கடல்சார் ஆணையம் அமைக்கப்படும்.

ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) திட்டம் அமல்படுத்தப்படும். போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.