ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டிணத்தில் திடீரென தொண்டர்களை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டிணம் விவேகானந்தா வித்யாலாயா மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.சனிக்கிழமை தேவிபட்டிணம் கடற்கரையில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் அனைவரும் இணைந்து யோகா மற்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

திடீரென நடத்திய இக்கைது சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக பா.ஜ.க.சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாநிலத் தலைவர் மாரிமுத்து,தமிழ்நாடு,கேரள மாநில பொறுப்பாளர் பத்மகுமார்,தென்தமிழக செயலாளர் ஆ.ஆடலரசன்,மாநில செயலாளர் து.குப்புராமு ஆகியோர் கைது சம்பவம் குறித்து மேலும் தெரிவித்தது..

ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் மிகவும் கட்டுப்பாடான ஒழுக்கம் நிறைந்த மாபெரும் இயக்கம்.இயற்கைப் பேரிடர்கள் உட்பட பல்வேறு ஆபத்தான காலங்களில் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ள இயக்கம்.

இந்த இயக்கத்தின் சார்பில் வருடம் தோறும் ஆண்டுக்கூட்டம் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டம் ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டிணத்தில் நடந்தது. இயக்கத்தின் வழக்கப்படி சாகா எனப்படும் யோகாசன பயிற்சியும்,பிரார்த்தனையும் மாலையில் செய்வது வழக்கம். இப்பயிற்சியினை தேவிபட்டிணத்தில் கடற்கரையோர பகுதியில் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த ராமநாதபுரம் டி.எஸ்.பி.அண்ணாமலை ஆழ்வார்,ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் திடீரென தொண்டர்களை கைது செய்து 3 மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்.

அமைதியான முறையில் எந்த விதிமீறல் இல்லாமலும்,சட்டம் ஒழுங்குக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பஜனையும், பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்த தொண்டர்களை காவல்துறை அதிகாரிகள் மிகவும் தரக்குறைவாக பேசியதுடன் கைது செய்திருப்பது மனித உரிமை மீறல்.மிகப்பெரிய கலவரம் நடந்து விட்டது போல அங்கு வந்த .டி.எஸ்.பி.வெள்ளைத்துரையும் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களிடம் பயங்கரவாதிகளிடம் பேசுவது போல பேசினார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது.காவல்துறையினரின் விதிமுறைப்படி முதலில் கலைந்து போகச் சொல்லவில்லை.முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து பேசாமல், யாரும் எந்தப் புகாரும் கொடுக்காத நிலையில் அனைவரையும் கைது செய்ததுடன் மிகவும் தரக்குறைவாக பேசியதால் அந்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய அளவிலான புனித ஸ்தலங்களில் காவல்துறை ஊர்வலங்கள்,கோவில் திருவிழாக்கள் ஆகியனவற்றை நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இக்கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பாக இன்று திங்கள்கிழமைஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்திட முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.பேட்டியின் போது சுதேசி இயக்க துணை அமைப்பாளர் நம்பி.நாராயணன், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகம்,பா.ஜ.கட்சியின் மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆத்மா கார்த்திக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.