மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல சமூக வலைத் தளங்களை அதிகம் பயன்படுத்தவேண்டும் என பாஜக எம்.பி.க்களுக்கு மூத்த தலைவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பி.க்களுக்கான பயிற்சிமுகாம் டெல்லி அருகேயுள்ள சுரஜ்கண்டில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்தமுகாமில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் விளக்கம் தந்தனர் .

முதல் நாளில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி ஆகியோர் பேசினர்.

2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுரேஷ் சோனி பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவது குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கினர். பியூஷ்கோயல் பேசியபோது, இன்றைய உலகில் தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவற்றின் மூலம் அரசின் திட்டங்களை மக்களிடம் பரப்பவேண்டும், அனைத்து எம்.பி.க்களும் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரகாஷ் ஜவடேகர் பேசி போது, சமூகவலைத் தளங்களை எம்.பி.க்கள் கவனமாக கையாள வேண்டும், கட்சிக்குள் எழும் கருத்து வேறுபாடுகளை அதில் பதிவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.