ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.

பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது :

“பிஎஸ்எல்வி. சி-23 ராக்கெட், பி.எஸ்.எல்.வி. பயணத்தில் மேலும் ஒருவெற்றி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நேரடியாக பார்வையிட்டது பெருமை தருகிறது . இதற்காக இஸ்ரோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கும், விண்வெளித்துறை வளர்ச்சிக்கும் நேரடியாக தொடர்பிருக்கிறது. 5 நாடுகளுடைய செயற்கோள்களை பிஎஸ்எல்வி. சி-23 ராக்கெட் தாங்கிச்சென்றிருப்பது உலகநாடுகள் மத்தியில் நமக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

நமது தேசத்தின் விண்வெளித்திட்டங்கள் மிகவும் தனிச் சிறப்பானவை. விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இந்தியதொழில்நுட்ப வளர்ச்சி பழங்கால தொன்மை வாய்ந்தது. பாஸ்கரச்சார்யா, ஆர்யபட்டா ஆகியோர் விட்டுச்சென்ற பணிகள்தான் இப்போதும் தொடர்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம தரும் . சார்க் நாடுகளுக்கு என தனி செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கவேண்டும்.

ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ‘கிராவிட்டி’ என்ற திரைப்படத்தை உருவாக்க ஆன செலவை விட இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலத்தை செலுத்த ஆன செலவு குறைவு என்பதை அறிந்தேன். குறைந்த செலவில் ஒருமகத்தான சாதனையை நாம் செய்துள்ளோம். இது, நம் விஞ்ஞானிகளின் வல்லமையையே பறைசாற்றுகிறது.

இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நாட்டில் பேரிடர் மேலாண்மையிலும் பெரும்பங்காற்றி வருகிறது. குறிப்பாக ‘பைலின்’ புயல் தாக்கிய போது அதுகுறித்து முன் அறிவிப்புகளை அவ்வப்போது துல்லியமாக வெளியிட்டு பல உயிர்களை காக்க உதவியது.

நமது ராக்கெட்டுகள் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. பல தலை முறைகளாக இதற்காக கடுமையாக உழைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு பெறச்செய்துள்ளனர். விண்வெளித் துறைக்கு மேலும் பலவெற்றிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. நம்மால் முடியும்!”என்று பிரதமர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.