மத்திய அமைச்சரவையிடம் தெரிவிக்காமலேயே இலங்கைக்கு இந்திய படைகளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அனுப்பி வைத்ததாகவும், தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர் பிரச்னை தவறாக கையாளப்பட்டு, இறுதியில் முற்றிலும் தோல்வியில் முடிந்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் மற்றொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இந்திரா – சோனியா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் ‘ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை என்ற தலைப்பில் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் தனது அரசியல் வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், வெளியில் தெரியாமல் இருந்துவந்த பல்வேறு அரசியல் ரகசியங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி குறித்தும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சோனியா காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர்கள் ஆட்சியிலும், கட்சியிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புத்தகம் வெளியாவதையொட்டி, ஆங்கில ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு இன்று இரண்டாவது நாளாக அளித்துள்ள பேட்டியில் நட்வர் சிங் கூறியிருப்பதாவது:

கடந்த 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தனது சகாக்களுடனோ அல்லது உயரதிகாரிகளுடனோ கலந்தாலோசிக்காமலேயே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

ராஜீவ் காந்தி அப்போது இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே அளித்த வரவேற்பில் கலந்துகொண்ட அவர், அங்கிருந்தபடியே எந்த ஒரு அதிகாரியின் ஆலோசனையையும் பெறாமல் இந்த முடிவை மேற்கொண்டார். தனக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு நடக்கக்கூடும் என அஞ்சிய ஜெயவர்த்தனே, இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதும் அவரது இந்த கோரிக்கைக்கு உடனே சம்மதம் தெரிவித்தார் ராஜீவ் காந்தி.

அந்த சமயத்தில் கொழும்பில் இருந்த நானும், பி.வி. நரசிம்மராவும் இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பும் உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டதை அறிந்து கொண்டோம்.

மேலும் யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தின் முற்றுகைக்குள்ளான தமிழர்களுக்கு, இந்திய விமானப்படை விமானங்களை அதிரடியாக அனுப்பி உணவு பொட்டலங்களை போடும் முடிவையும் ராஜீவ் காந்தி மிகச் சாதாரணமான மற்றும் வீராவேச முறையிலும் மேற்கொண்டார்.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கோ, ஐக்கிய நாடு சபையில் உள்ள இந்திய பிரதிநிதிக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கூட ராஜீவ் காந்தியும், அவரது குழுவினரும் அறிந்திருக்கவில்லை.

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை அரசு இதை வைத்து பிரச்னையை உருவாக்கும் என நான் சுட்டிக்காட்டிய பின்னரே, அவர்கள் இதுகுறித்து இருதரப்புக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை ராஜீவ் காந்தி மிகவும் நம்பினார். பிரபாகரனை ராஜீவ் காந்தி சந்தித்த பின்னர் (இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பாக) “பிரபாகரனிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதி எதையும் வாங்கினீர்களா?” என நான் ராஜீவிடம் கேட்டேன்.

நான் இவ்வாறு கேட்டதும் எரிச்சலுற்ற ராஜீவ், ” அவர் வார்த்தையால் உறுதி அளித்துள்ளார்” எனக் கூறினார். ஆனால் பிரபாகரன் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட அனைவரிடமும் இரட்டை கலப்பு நிலையையே மேற்கொண்டிருந்தார்.

எந்த ஒரு நோக்கமோ அல்லது விவரணமோ தெரிவிக்கப்படாமலேயேதான் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் பூகோள அமைப்பு குறித்தோ அல்லது விடுதலைப் புலிகளின் மறைவிடங்கள் குறித்தோ இந்திய அமைதி படைக்கு எதுவும் சொல்லப்படவில்லை.

தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர் பிரச்னை தவறாக கையாளப்பட்டு, இறுதியில் முற்றிலும் தோல்வியில் முடிந்தது என அந்த பேட்டியில் கூறியுள்ளார் நட்வர் சிங்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.