பாஜகவினர் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்கும் கமலாலய தரிசனம் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது .

தமிழக பாஜக சார்பில் கடந்த 4 வருடங்களாக 'கமலாலய தரிசனம்' என்னும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது. இதற்காக சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு தொண்டர்கள் தங்கள் குடும்பத்தோடு வருவார்கள். கமலாலய தரிசன நாளில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் அங்கு இருப் பார்கள். அவர்களை, தொண்டர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்து உரையாடுவார்கள்.

இந்த தினத்தில் தொண்டர்களுக்கு எந்தக் கட்டுப் பாடுகளும் விதிக்கப்படாது. அதனால் அவர்கள் கமலாலயத்தின் எல்லா பகுதிக்கும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கட்சிபணிகள் குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். முக்கிய நிர்வாகிகள் தொண்டர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர். புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இரவு 9 மணியளவில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்தாய் விருது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

கமலாலய தரிசன நிகழ்ச்சிக்கிடையே, பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் கமலாலய தரிசனம் நடத்தப்பட்டு வருகிறது. இது 5-வது ஆண்டாகும். தலைவர்களுக்கும் தொண்டர்கள் குடும்பத்தினருக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தும் குடும்ப விழா இது.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வை காண்பதற்கு மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்களுக்கு நான் ஒரு உறுதிமொழி கொடுத்திருக்கிறேன். விரைவில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மீனவ அமைப்பு நிர்வாகிகளுடன் சேர்ந்து சந்தித்து பேச இருக்கிறோம்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 94 மீனவர்கள் மற்றும் அவர்களின் 63 படகுகளையும் 10 நாட்களுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ பிரச்சினை என்பது பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. கச்சத்தீவு மீட்பது குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். பொதுவாக மீனவர் நலன் காப்பதிலும், மீன்பிடிப்பதில் அவர்களுக்கு உள்ள சிக்கல்களை தீர்ப்பதிலும் மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண முயற்சி மேற்கொள்ளும். சில சட்ட சிக்கல்கள் உள்ளது. அதனை தீர்த்து தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

தமிழக முதல்–அமைச்சர் மற்றும் பிரதமர் குறித்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் வெளியான கட்டுரையை தொடர்ந்து, இலங்கை மன்னிப்பு கேட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் தங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று அந்த நாடு கூறுவது கேலி கூத்தாக உள்ளது. மீண்டும் இதுபோல் நடந்தால் அதை மத்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. எங்களை பழைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்று இலங்கை ஒருபோதும் எண்ணக்கூடாது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.