இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் குறித்து வெளியான அவதூறு கட்டுரை விவகாரத்தில், தில்லியில் உள்ள இலங்கைத்தூதர் சுதர்ஸன் சேன விரத்னேவை திங்கள்கிழமை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “தமிழக முதல்வர் – இந்திய பிரதமர் இடையிலான கடிதப்பரிமாற்றங்களை இழிவுபடுத்தி இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியான கட்டுரை கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தில்லியில் உள்ள இலங்கைத்தூதரை அழைத்து கடும்கண்டனம் தெரிவிக்கப்படும்’ என உறுதியளித்தார்.

அதன்படியே, இலங்கைத் தூதர் சுதர்ஸன் சேனவிரத்னே, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை மாலையில் வரவழைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இலங்கை விவகாரங்களை கவனிக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் சுசித்ரா துரை, இந்தியாவின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்தார்.

“இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை இணையதள விவகாரம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கடும்அதிருப்தி, கண்டனம் ஆகியவற்றை உங்களிடம் முறைப்படி மத்திய அரசு பதிவுசெய்கிறது. இத்தகைய செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று உங்கள் நாட்டு அரசிடம் கூறுங்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

இத்தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீனும் உறுதிப்படுத்தினார். “இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மிகவும் கடுமையான முறையில் இந்தியாவின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் மத்திய அரசு பதிவுசெய்துள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.