இந்துமுன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான சுரேஷ் குமார், அம்பத்தூரில் கடந்த ஜூன் மாதம் 18–ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்து முன்னணி தெரு முனை கூட்டங்களில் இந்து மதத்தை பற்றி பல்வேறு தகவல்களை திரட்டி புள்ளி விவரங்களுடன் பேசி வந்த சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்போது தீவிரவாத இயக்கத்தினர் சிலர்தான் திட்டம் போட்டு சுரேஷ் குமாரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் பெரியளவில் உதவிகள் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். அவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து கைதுசெய்ய போலீசார் முடிவு செய்தனர். இதன்படி சந்தேகத்துக்கிடமாக சிக்கிய நூற்றுக் கணக்கானோரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அம்பத்தூர் பாடியை சேர்ந்த நசீர், கடலூர் பரங்கிப் பேட்டையை சேர்ந்த குத்புதீன் மற்றும் காஜா மொய்தீன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சிக்கினர். இவர்களுடன் 17வயது மாணவர் ஒருவரும் பிடிபட்டார். இவர்கள் அனைவரும் சுரேஷ்குமாரின் நடமாட்டம் பற்றி கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்கள். இருப்பினும் சுரேஷ்குமாரை வெட்டிக்கொன்றவர்கள் யார்? என்பதில் மர்மம் நீடித்தது.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் 4 பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் மயில் வாகனன் ஆகியோர் 4 தீவிரவாதிகளையும் எப்படி பிடிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் 2 நாட்களுக்கு முன்னர் பெங்களூருக்கு விரைந்தனர். அங்கு விவேக் நகர் மற்றும் சிவாஜி நகர் பகுதியில் முகாமிட்ட அவர்கள் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த ரகசிய ஆபரேஷனுக்கு நல்ல பலன் கிடைத்தது. தீவிரவாதிகளில் ஒருவனான சமியுல்லா, வியாபாரி போல பெங்களூரில் பதுங்கி இருப்பதை முதலில் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதை தொடர்ந்து அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சமியுல்லா பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவது அம்பலமானது. தான் பெட்டிக்கடை வைத்துள்ள அதே பகுதியிலேயே சமியுல்லா வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த வீட்டில் சலீம், சாதிக், நவாஸ் ஆகியோர் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவை அனைத்தையும் கண்டு பிடித்த போலீசார் நேற்று இரவு 4 தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக 4 பேரும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். இன்று காலை 6.30 மணி அளவில் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு போலீசார் சென்னையை வந்தடைந்தனர். கைது செய்யப்பட்ட சலீம், சமியுல்லா, சாதிக், நவாஸ் ஆகிய 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கொலையின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? சுரேஷ்குமாரை கொலை செய்ய சென்னையில் வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றி 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் அளிக்கும் தகவல்களை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ள போலீசார் அனைவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். சுரேஷ்குமாரை போல மேலும் பல இந்து இயக்க தலைவர்களுக்கு இவர்கள் குறி வைத்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

சென்னையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் 11 பேரை தீர்த்துக் கட்டப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்துக்கும், கைதான தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடக்கிறது. இதன் முடிவில் தீவிரவாதிகள் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ்குமார் கொலையில் சிக்கியிருக்கும் 4 பேரில், சலீம், நவாஸ் இருவரும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சி பிரமுகரான எம்.ஆர்.காந்தியை வெட்டிக் கொலை செய்ய முயன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.