லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியமைக்க உதவிய அனைவருக்கும் நன்றி இந்த தேர்தலில் கட்சியின் தேசியதலைவராக இருந்த ராஜ்நாத்சிங் கேப்டன் போல் செயலாற்றினார். அமித்ஷா இந்த தேர்தலின் மேன் ஆப் த மேட்ச் என்று டில்லியில் நடந்து வரும் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வின் கேப்டன் ராஜ்நாத் சிங். ஆனால் ஆட்டநாயகன் அமித் ஷா. நாட்டுமக்கள் தங்கள் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். இப்போது மக்களுக்கு கடமையாற்றும் கட்டாயம் நமக்கு வந்துள்ளது. இது நமதுமுறை.

ஆட்சிக்கு வந்தது முதல் பழைய ஆட்சியின் தவறுகளை களைவதிலேயே நேரம் வீணாகி கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள பணிநடைமுறையை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். விரைவிலேயே நடைமுறையை மாற்றி, பாஜக தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

இந்தியாவை பற்றிய உலகின்பார்வை தற்போது வேகமாக மாறிவருகிறது. மக்களின் மிகப் பெரிய ஆதரவுடன் இந்தியாவில் அரசு அமைந்துள்ளது தான் இதற்குகாரணம். கடந்த 60 நாட்களில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாடு வியத்தகு அளவுக்கு மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டுவளர்ச்சிக்கான ஒரு கருப்பொருளை பாஜக வெளியிட உள்ளது. மின்சாரம், கழிவறை, பெண்குழந்தைகளுக்கு கல்வி என்று பல தலைப்புகளில் ஆண்டுக்கு ஒரு கருப் பொருளை எடுத்து அதற்காக முக்கியத்துவம் கொடுத்து உழைக்கப்படும்.

விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாஜக அரசின்கொள்கை. விவசாயிகள் நலனை அரசு தூக்கி பிடித்ததால் தான் உலகவர்த்தக அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும், விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று இந்தியா கூறிவிட்டது. புதிய இந்தியாவை உலகம் இப்போது பார்த்துக் கொண்டுள்ளது. நாட்டில் அமைதி நிலவினால் தான் முன்னேற்றம் காணமுடியும். ஆனால், தேர்தலில் அடைந்த மிகப்பெரும் தோல்வியால் துவண்டுள்ளவர்கள் மத ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சிசெய்கிறார்கள். இந்தநாடு, ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது.இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.