சகோதரத் துவத்தை உணர்த்தும் ‘ரக்ஷாபந்தன்’ விழா இன்று கொண்டாடப்படுகிறது. நரேந்திர மோடி, ஜெயலலிதா படங்களுடன் ராக்கிகயிறுகள் அமோகமாக விற்பனை ஆனது.

சகோதர, சகோதரிகளிடையே அன்பை உணர்த்தும்வகையில் கொண்டாடப்பட்டு வரும் ‘ரக்ஷா பந்தன்’ விழா இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழா வட இந்தியாவில் ‘ஷ்ராவன்’ மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று கொண்டாடபடுகிறது.

ரக்ஷாபந்தன் விழாவையொட்டி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, நெல், கோதுமை முதலான தானியங்கள், இனிப்புகள், பணம், சந்தனம், குங்குமம் வைத்து விளக்கேற்றுவார்கள். சகோதரிகள், தங்களின் சகோதரர்களுக்கு ராக்கிகயிற்றை கட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள்.

இதற்கு பிரதிபலனாக, சகோதரர்கள் தங்கள் வாழ்நாள்முழுவதும் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளிப்பார்கள். சகோதர-சகோதரிகள் அருகில் இல்லை என்றாலும், சகோதரர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சகோதரிகள் ராக்கிகயிறுகளை தபால் மற்றும் கூரியர்மூலம் அனுப்பி வைக்கின்றனர். பதிலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை அனுப்பிவைக்கின்றனர்.

முதன்முதலில் சொந்த சகோதரர்களுக்கு மட்டுமே கட்டி வந்த ராக்கிகயிறுகள், பின்னர் அண்டைவீட்டில் உள்ள ஆண்கள் மற்றும் நண்பர்களுக்கும் சகோதரிகளாக கருதிகட்டப்பட்டது. இந்துக்கள் மட்டுமே கட்டிவந்த இந்த ராக்கிகயிறுகள் பின்னர் மற்ற மதத்தினராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்-அமைச்சர்களுக்கு தொண்டர்களும், பொதுமக்களும் ராக்கி கயிறுகளை கட்டிவருகின்றனர். முன்பு, நூல்களினால் உருவாக்கப்பட்ட ராக்கி கயிறுகள் விற்பனை செய்யப்பட்டன. இப்போது புதுப்பரிணாமம் எடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் பொம்மை வடிவங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.