அசியா பீபீ பாக்கிஸ்தானில் உள்ள இட்டான் வாலியில் வசிக்கும் ஒரே ஒரு கிருத்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண். தோட்டத்தில் வேலை செய்துவிட்டு அருகிலிருந்த கிணற்றில் தண்ணீர் எடுத்து ஒரு குவளையில் குடிக்க முற்பட்டபோது, அருகில் இருந்த பெண், இது இஸ்லாமியர்கள் பருகும் தண்னீர், நீ இதை பருகக்கூடாது என்று தடுத்தாள். அவளுடன் மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். அசியா பீபீக்கும் மற்றவர்களுக்கும் சண்டை பெரிதாகிவிட்டது.

இந்த சண்டையின் நடுவே அசியா பீபீ" "என்னுடைய மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய ஏசு கிருத்துவோ பாவத்தில் உழன்ற மக்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார், உங்கள் நபி மனித குலத்திற்காக ஏதாவது செய்தாரா?" என்று கூறியதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.
உடனே இந்த விவகாரம் ஒரு முல்லாவிற்குச் சென்றது. பின்னர் அவர் மூலம் காவல் துறைக்கு. அசியா பீபீ யின் இல்லத்தார்கள் தாக்கப்பட்டனர். காவல் துறை அசியா பீபீ யை கைது செய்தது. அவர் மீது 'தெய்வ நிந்தனை' செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது இஸ்லாமிற்கும், நபிக்கும் எதிராக பேசியதாக வழக்கு. இதற்கு தண்டனை வேறோன்றுமில்லை, மரணம் தான்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷேக்புரா அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அசியா பீபீ, நான் தெய்வ நிந்தனை செய்யவில்லை, என் மீது ஏற்கனவே உள்ள பகையின் காரணமாக என்னுடைய பக்கத்து வீட்டுக்காரப் பெண் நான் தெய்வ நிந்தனை செய்ததாக என் மீது பொய்சாட்சி சொல்கிறார் என்றார். ஷரியத் சட்டப்படி இஸ்லாமியர்கள் இல்லாதவர்களின் சாட்சியம் (இஸ்லாமியர்களின் சாட்சியத்தை ஒப்பிடுகையில்) பாதிஉண்மை உள்ளதாகத்தான் கருதப்படும். விளைவு அசியா பீபீயின் சாட்சியம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அசியா பீபீக்கு தூக்கு தண்டன விதித்து தீர்பளித்தது நீதிமன்றம்.

பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீர் அசியா பீபீக்கு வழங்கப்பட்ட தண்டைனையை எதிர்த்தும், அசியா பீபீயின் விடுதலைக்காகவும் முயற்சிகள் மேற்கொண்டார். விளைவு, அவர் தாலிபான்களால் மேலுலகம் அனுப்பப்பட்டார். சல்மான் தசீரினுடைய மகனும் கடத்தப்பட்டு அவரது நிலவரம் இன்றுவரை என்னவென்று அறியப்படாமல் இருக்கிறது.

பாக்கிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்த பாக்கிஸ்தானின் சிறுபான்மை அமைச்சரான சாபாஷ் பட்டியும் தாலிபான்களால் மேலுலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையில் அசியா பீபீக்கு எதிராக போராட்டங்களும் கண்டன ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. ஒரு முல்லா, அசியா பீபீயின் தலையை யார் துண்டித்து எடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் சன்மானம் என்று அறிவித்தார். அசியா பீபியின் குடும்பமும் (கணவன் மற்றும் 5 குழந்தைகள்) பயமுறுத்தல் தொடரவே தலைமறைவாகினர்.

ஐரோப்பிய நாடுகள், அசியா பீபீ விடுதலையாகும் பட்சத்தில் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவிப்பு விடுத்திருந்தனர். ஆனால் அப்போதைய பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃ அலி சர்தாரி அசியா பீபீக்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார்.
உலக நாடுகளின் கண்டனத்தின் பேரில், அசியா பீபீ இன்னும் தூக்கிலிடப்படவில்லை. மாறாக சிறையில் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அசியா பீபீயின் கதை "Blasphemy: A Memoir: Sentenced to Death over a Cup of Water" என்ற புத்தகமாக வெளி வந்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.