பிரதமரின் மக்கள் நிதித்திட்டம் (பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா) வெற்றி பெற அரசியலை கடந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் வியாழக் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்ற விழாவில் பிரதமரின் மக்கள்நிதி திட்டத்தை ஆளுநர் கே. ரோசய்யா தொடங்கிவைத்து பேசியதாவது;

30 ஆண்டுகளுக்கு பிறகு தனிப் பெரும் பான்மையுடன் ஒருகட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது 2014ல் நடந்த மிகப் பெரிய மாற்றமாகும். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, தனது அரசு ஏழைகளுக்கான அரசாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்தார். அதனை செயல்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் மோடி, வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு தொடங்கும் பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி வங்கி கணக்கு தொடங்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1 லட்சத்துக்கு விபத்துகாப்பீடும், பற்று அட்டை (டெபிட் கார்டு) மூலம் அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்கும்வசதியும் கிடைக்கும்.

6 மாதங்களுக்கு வங்கிக் கணக்கை முறையாகப் பயன்படுத்து பவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மிகைப் பற்று (ஓவர் டிராப்ட்) வசதியும் கிடைக்கும். இந்த வங்கிக்கணக்கு மூலம் ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை சுலபமாகப் பெறமுடியும்.

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுமார் 90 கோடி பேரிடம் செல்பேசி உள்ளது.

இதன் மூலம் வங்கி சேவையை எளிதாகக் கையாளமுடியும். இதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. அனைத்து கிராமங்கள், பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணையதள இணைப்பு வசதியும், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை வை-ஃபை வசதிகொண்ட வளாகங்களாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நடப்பாண்டில் 60 ஆயிரம் கிராமங்களுக்கும், அதன்பிறகு ஆண்டுக்கு 1 லட்சம் கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணையதள இணைப்புவசதி அளிக்கப்படும்.

எனது நிர்வாகத்தின் கீழ் வரும் அஞ்சல்துறை, பிஎஸ்என்எல்., தகவல்தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஊழியர்கள் ஒவ்வொருவரும், பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் ஒரு நபரையாவது வங்கிக்கணக்கு தொடங்கச் செய்யவேண்டும் என்று இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மக்கள் நலனுக்கான இந்தத்திட்டம் முழுமையான வெற்றிபெற அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.