அடுத்தமாதம் 27-ம் தேதி, அமெரிக்காவின் "சிலிக்கான் வேலி' பகுதிக்கு செல்ல உள்ள பிரதமர் மோடியின் உரையைக் கேட்க 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர்.

கடந்த ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மோடி சென்றபோது, அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க 30,000 பேர் பதிவுசெய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு கணினி நிறுவனங்கள் அமைந்துள்ள "சிலிகான்வேலி' பகுதிக்கு வருகைதர உள்ள மோடியின் உரையை கேட்க கடந்த ஆண்டு பதிவுசெய்ததைவிட நிகழாண்டில் அதிகம்பேர் பதிவு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் செவ்வாய்க் கிழமை இரவு முன்பதிவு செய்தனர்.

பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கபடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், "சிலிக்கான் வேலி' பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் ஏற்பாடுகள் குறித்து பார்வையிட சென்ற பாஜகவின் வெளிநாட்டு தொடர்புத்துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே கூறுகையில், "இத்தனை டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டது வியப்பளிக்கிறது. இது நிச்சயம் மோடியின் மாயாஜாலம் தான்' என்றார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்துக்கு வருகை தரவுள்ள முதல் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply