சீன எதிர்ப்பையும் மீறி, தென் சீனக்கடல் பகுதியில் எண்ணெய் துரப்பண பணியை மேற்கொள்வது தொடர்பாக இந்தியா-வியத்நாம் இடையே செவ்வாய்க் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்த வியத்நாம் பிரதமர் குயென் டான் டங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார்.

இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய உறவுகள், பிராந்திய விவகாரங்கள், சுமுகமான கடல் போக்குவரத்து ஆகியவை குறித்து இருநாட்டுப் பிரதமர்களும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, தென் சீனக்கடல் பகுதியில் இந்தியா-வியத்நாம் இடையேயான மற்றொரு எண்ணெய் துரப்பண பணியை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏற்கெனவே, வியத் நாம் நாட்டுக்கு சொந்தமான 5 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி கூடுதலாக இரண்டு எண்ணெய்க் கிணறுகளில் துரப்பணப் பணியை இந்தியா மேற்கொள்ளும்.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி. விதேஷ் லிமிடெட் – வியத்நாம் பெட்ரோ நிறுவனத்துக்கும் இடையே இதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் பெட்ரோலியத் துறையில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கிடையே சுமுக ஒத்துழைப்பை ஏற்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

* வியத்நாமின் கடற்படைக்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய ராணுவத்துக்கு சொந்தமான 4 ரோந்துக்கப்பல்கள் அந்நாட்டுக்கு வழங்கப்படும்.

* இருநாட்டு ராணுவங்கள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகைகள், ராணுவ கருவிகளை பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

* வியத்நாம் விமானப் படை யினருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை இந்தியா தந்து உதவும்.

* பாதுகாப்பு தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துதல், கடற் படையினருக்கு பயிற்சி, ராணுவத் தரம்மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கும்.

* தென் சீனக்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதற்கோ, அங்கு விமானங்கள் பறப்பதற்கோ எந்தநாடும் தடை விதிக்க முடியாது என்ற உறுதிப்பாட்டை இரு நாடுகளும் எடுத்துக்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.