மராட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மராட்டிய சட்ட சபையின் 288 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில், தனித்து ஆட்சியமைக்க போதுமான அளவுக்கு எந்த கட்சிக்கும் தனிமெஜாரிட்டி கிடைக்க வில்லை. ஆனால் பா.ஜ.க 122 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக திகழ்கிறது. 63 இடங்களில் வெற்றிபெற்று சிவசேனா 2-வது பெரிய கட்சியாக உள்ளது சிவசேனாவும் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துவிட்டது.

புதிய அரசு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 31ந் தேதி (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க இருப்பதாக தெரியவருகிறது. மராட்டிய அரசியல் வரலாற்றில் பா.ஜ.க அரசு முதல் தடவையாக அமைகிறது. பதவி ஏற்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் புதிய முதல்மந்திரியை தேர்வுசெய்ய பா.ஜனதா எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பணிக்காக பா.ஜனதா மேலிடபார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மராட்டிய பா.ஜ.க புதிய பொறுப்பாளர் ஜே.பி. நட்டா, மூத்த தலைவர்கள் ஓம் பிரகாஷ், ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரும் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக சட்ட சபைத் தலைவராக கட்சியின் மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். எல்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் எதிர்ப்பு இன்றி முதல்மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

44 வயதான தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்வதுடன், பலபுரட்சிகரமான முடிவுகளையும் எடுத்து அவ்வப்போது அசத்தி இருக்கிறார். இதன் காரணமாகவே, தேவேந்திர பட்னாவிசை 'நாக்பூர் நாட்டுக்கு அளித்த கொடை' என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் புகழ்ந்தார். இந்த சட்ட சபை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேவேந்திர பட்னாவிஸ் தற்போது 4-வது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆக தேர்வாகியுள்ளார். தவிர நாக்பூரின் இளவயது மேயர் என்ற பெருமையையும் அவர் ஏற்கனவே படைத்து இருக்கிறார்.

தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் மேயராக பதவியேற்ற போது அவரது வயது வெறும் 27தான். சிறிய வயதிலேயே அவர் எண்ணற்ற நலதிட்டங்களை அறிமுகப்படுத்தி நாக்பூர் மக்களின் நம்பிக்கையை கவர்ந்தவர் ஆவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.