நிர்வாகத் திறமையிலும், வியூகம் வகுப்பதிலும் வல்லவர் என்றறியப்படும் ஸ்ரீ.அமித்ஷா அவர்கள், அரசியல் சாதனைகளுக்கும், தன் கொள்கைகளில் அற்பணிப்புடன் பணியாற்றுவதிலும் புகழ்பெற்ற அரசியல்வாதியாவார்.

அக்டோபர் 22, 1964ல் பிறந்த ஸ்ரீ.அமித்ஷா அவர்களுக்கு அரசியல் பிறப்பிலேயே வந்ததல்ல. மாறாக, 'இந்த சமூகத்திற்கு நீ சேவை செய்' என, தன்னுடைய கொடையாளி குடும்பத்தினரின் விருப்பத்திற்கிணங்க பணிக்கப்பட்டவர். ஸ்ரீ.அமித்ஷா அவர்கள், தன் 14 வயது இளம்பருவத்திலேயே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) ' ஸ்வயம் சேவகராக' இணைந்தார். அதுதான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

 

குஜராத் பாஜகவில் அமித்ஷாவின் பங்கு:

உயிர் வேதியியல் மாணவரான அவருக்கு, 1982ல் அஹமதாபாத் ABVP மாணவரமைப்பின் செயலாளர் பொறுப்பளிக்கப்பட்டது. பின்னர் அஹமதாபாத் நகர பாஜகவின் செயலாளர் ஆனார். அதிலிருந்து பின்னோக்கி பார்க்கும் வாய்ப்பே அவருக்கு ஏற்படவில்லை. தொடர்ந்து பல சிக்கலான பதவிகளை வகித்து வந்த ஸ்ரீ.அமித்ஷாவின் மதிப்பு, குஜராத் மாநில பாஜகவில் உயர்ந்துகொண்டே வந்தது. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) தேசிய பொருளாளரான அவர், பின்னர் குஜராத் மாநில பாஜகவின் துணைத் தலைவராகவும் உயர்ந்தார்.

திடமான தேர்தல் வெற்றிகள்:

1995ம் ஆண்டு, ஸ்ரீ.அமித்ஷா அவர்கள், சர்கெஜ் சட்டசபை தொகுதி உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடியும் அதே தொகுதிக்கு உறுப்பினராக 1998ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை தனக்கெதிராக போட்டியிட்டவரை விட 1,32,477 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். 2002ல் தொடர்ந்து அதே சர்கெஜ் சட்டசபை தொகுதிக்கு தன் எதிரியை 1,58,036 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காண்பித்தார். 2007ம் ஆண்டில் தன் சாதனை வெற்றியை தானே முறியடித்தார் அவர்; இம்முறை வித்தியாசம் 2,32,823 வாக்குகள். 2012ம் ஆண்டு நரன்புரா தொகுதியிலிருந்து ஐந்தாம் முறையாக குஜராத் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றார்.

கூட்டுறவுத்துறையில் உண்டான திருப்பம்:

சாகும் தருவாயில் உள்ள எந்த நிறுவனத்திற்கும் அதன் தலைவிதியை மாற்ற ஒரு தெளிவான பார்வை வேண்டும். அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு இது முற்றிலும் பொருந்தும். 2000ம் ஆண்டில் சரியான தலைமை இல்லாததால், தள்ளாடிக்கொண்டிருந்த வங்கி, நலிவுற்றது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சவாலாக ஸ்ரீ.அமித்ஷா அவர்கள், வங்கியின் சேர்மனாக அனுப்பப்பட்டார். ஷா அதை நேர்மறையாக அணுகி ஆராய்ந்ததில், திறமையான நிர்வாகம் மற்றும் பணி நெறிமுறைகளுடன் விடாப்பிடியாக நடத்தினால், வங்கியை சரிப்படுத்தி பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையும் அளிக்க முடியும் என நம்பினார். அந்த ஆண்டில் வங்கி ரூ.20.28 கோடி நஷ்டத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. வங்கி அவர் கைக்கு வந்த ஒரே ஆண்டில், வங்கி தன் கடன்களை அடைத்து, லாபம் ஈட்டும் வங்கிகளின் வரிசையில் இடம் பிடித்து, 10% ஈவுத்தொகையும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று, அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியானது நாட்டின் 367 கூட்டுறவு வங்கிகளில் முன்னணியில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில், மாதவ்புரா மற்றும் சில நகர கூட்டுறவு வங்கிகளின் மூடல், மக்களிடையே கூட்டுறவு வங்கிகளின் மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படுத்தியிருந்த வேளையில், ஸ்ரீ.அமித்ஷா தானே முன்வந்து அவற்றை கையிலெடுத்து வைப்புதாரர்களின் நம்பிக்கையை மீட்டார். அவர் பங்கு கொண்டதால் உண்டான நம்பிக்கையில் அரசும், ரிசர்வ் வங்கியும் மாதவ்புரா வங்கிக்கு மறுசீரமைப்புக்கு தொகுப்பு நிதியளித்தன. மேலும் அவர் முன்னிலையில் நெகிழ்வைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கூட்டுறவு வங்கிகள் பாதுகாப்பான, லாபகர முதலீட்டிற்கு வழிவகை செய்யப்பட்டது. அவருடைய உறுதியான நிலைப்பாட்டால் கூட்டுறவு சட்டங்கள் மாநில அரசால் திருத்தப்பட்டது. இச்சட்டங்களின் மூலம் மோசடி கூட்டுறவு வங்கிகளின் தலைவர்கள், நடவடிக்கைக்கு உள்ளாக வழியேற்பட்டுள்ளது.

மாநில நிர்வாகத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகள்:

1995ம் ஆண்டு, குஜராத் மாநில முதல்வராக ஸ்ரீ.கேஷுபாய் படேல் இருந்த காலத்தில், ஸ்ரீ.அமித்ஷா அவர்கள் குஜராத் மாநில நிதி கார்ப்பரேஷனின் (GSFC) இளம் வயது சேர்மனாக நியமிக்கப்பட்டார். 2002ல் ஸ்ரீ.நரேந்த்ர மோதி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர், போக்குவரத்து, காவல், வீட்டுவசதி, எல்லைப்பாதுகாப்பு, குடிமைப்பாதுகாப்பு, கிராம நலன், ஊர்க்காவல், சிறை, சுங்கம், சட்டம் மற்றும் நீதி, சட்டமன்ற அலுவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றினார்.

2014 பொதுத்தேர்தல்கள்:

அவருடைய அரசியல் வியூகத்திறன் மற்றும் நோக்கு, போன்றவற்றால் கட்சியின் பொதுச்செயலாளராக 2010ம் ஆண்டு நியமிக்கப்பட்டு, தேர்தல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பொறுப்பாளராக (ப்ரபாரி) நியமிக்கப்பட்டார். குறுகிய கால அவகாசத்திலேயே, ஸ்ரீ.அமித்ஷா அவர்கள் வகுத்த வியூகத்தால் திருப்பம் உண்டாகி, உ.பியில் பாஜக கூட்டணி 80 இடங்களில் 73 இடங்களில் வெற்றியை ஈட்டியது. அவர் உ.பியின் ப்ரபாரியான இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் இரண்டரை மடங்கு உயர்ந்தது.

பாஜகவின் தேர்தல் பணிக்குழு உறுப்பினரான ஸ்ரீ.அமித்ஷா, 2014 தேர்தலில் மக்கள் தொடர்பு, வெகுஜனத்தொடர்பு (Mass Marketing) மற்றும் புது உறுப்பினர் சேர்ப்பு போன்ற பொறுப்புகளையும் வகித்தார். கடந்த 2014 லோக்சபை தேர்தல்களில் பாஜக பெற்ற பொறாமைப்படத்தக்க வெற்றிக்கு, அவருடைய வெற்றியீட்டும் வியூகத்திறன் முக்கியப்பங்காற்றியது என்று கூறினால் அது மிகையாகாது.

விளையாட்டுத்துறை நிர்வாகம்:

ஸ்ரீ.அமித்ஷா அவர்கள் குஜராத் மாநில சதுரங்க சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2009ல் குஜராத் கிரிக்கட் சங்கத்தின் துணைத்தலைவரானவர், 2014ல் அதன் தலைவராகவும் ஆனார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.