சர்வதேச பயங்கர வாதத்துக்கும், போதை மருந்துக் கடத்தலுக்கும் எதிராக கூட்டுநடவடிக்கை அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மியான்மர் தலை நகர் நேப்பிடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 9ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பான கிழக்காசிய உச்சிமாநாட்டின் பிரகடனத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே சமயத்தில், அனைத்து விதமான தீவிரவாத செயல்களுக்கும் எதிரானபோரில் சர்வதேச அளவிலான தோழமை அவசியம். குறிப்பாக, பயங்கரவாதம், போதைமருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவும் ஆசியான் அமைப்பும் கூட்டாகச் செயல்பட வேண்டி யுள்ளது. மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்று பட வேண்டும். மதத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் இடையிலான எந்தத் தொடர்பையும் நாம் நிராகரிக்கவேண்டும்.

பயங்கர வாதத்தின் சவால்கள் அதிகரித்துள்ளன. போதை மருந்து கடத்தல், ஆயுதக்கடத்தல், சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.

பாதுகாப்பு சிக்கல்கள்: கிழக்காசிய பிராந்தியத்தில் பல்வேறு சிக்கலான பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே நல்ல புரிந்துணர்வும் நம்பிக்கையான சூழலையும் வலுப்படுத்த தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் அவசியம்.

சுதந்திரம், உலகமயமாக்கல் ஆகியவை அடங்கிய இன்றைய உலகில் சர்வதேச விதி முறைகளை அனைவரும் பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை. இது கடல்சார் பாதுகாப்புக்கும் பொருந்தும். தென்சீனக் கடல்பகுதியில் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் சர்வதேச சட்டங்களையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது "கிழக்கை நோக்கி' என்ற கொள்கை வகுக்கப்பட்டது. அந்த கொள்கையை முன்னாள் பிரதமர்களான வாஜ்பாயும், மன்மோகன்சிங்கும் பின்பற்றினர். "கிழக்கை நோக்கி' என்ற கொள்கையை கிழக்காசிய நாடுகளின் மேம் பாட்டுக்காகச் செயல்படுவது என்ற கொள்கையாக மாற்ற, ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களாக எனது அரசு பாடுபட்டு வருகிறது. இந்த கொள்கையின் முக்கியத்தூணாக கிழக்காசிய உச்சிமாநாடு திகழ்கிறது. பேரிடர்க் கால மேலாண்மை விவகாரத்தில் கிழக்காசிய உச்சிமாநாட்டின் முன்முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

சரக்குகள், சேவைகளுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கும் சமச் சீரான பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிராந்திய ஒருமைப் பாட்டுக்கும் செழுமைக்கும் இது வழிவகுக்கும் என்றார் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.