தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து, நேற்று அவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். 5 பேரும் விமானம் மூலம் இன்று திருச்சி அழைத்து வரப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேரும் கைது ஆனார்கள். கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரையும் மீட்கக்கோரி அரசியல் கட்சிகள் மத்திய அரசை வற்புறுத்தின.

இதைத் தொடர்ந்து, 5 மீனவர்களையும் மீட்பது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் பேசினார். இதற்கிடையே, தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு நகரில் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் இந்த அப்பீல் வழக்கு நடைபெறுவதை விரும்பாத அதிபர் ராஜபக்சே, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி 5 மீனவர்களையும் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்தார். பொதுமன்னிப்பு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதன்பேரில், இந்திய தூதரகத்தின் சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதிபர் ராஜபக்சே நேற்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தார். இதற்கான அறிவிப்பை ராஜபக்சே வெளியிட்டு இருப்பதாக அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.

இதேபோல் தமிழக மீனவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த தகவல் கொழும்பு வெலிக் கடை சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரையும் சிறையில் இருந்து அவர்கள் விடுதலை செய்தனர். 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பிறகு 5 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்திய தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவில் அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், கடந்த அக்டோபர் 30-ந் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதையும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக கூறப்பட்டு இருந்தது. மனிதாபிமான அடிப்படையில் 5 பேரையும் விடுதலை செய்த அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது இந்த நடவடிக்கை இந்தியா-இலங்கை இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

5 இந்திய மீனவர்களின் தண்டனையையும் ரத்து செய்து அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ததற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கூறினார். 5 மீனவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு இந்தியாவில் தண்டனை எதுவும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

தூதரகத்தில் இருந்தபடி, மீனவர் லாங்லெட் தங்கச்சிமடத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் 5 பேரும் விடுதலையான தகவலை தெரிவித்தார்.

இதை அறிந்ததும் 5 பேரின் குடும்பத்தினரும், மீனவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.