காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், மனித நேயம் அடிப்படையில் முன்னாள் பிரதமர் வாஜ் பாய் என்ன செய்ய நினைத்தாரோ அந்த கனவை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு , இம்மாநிலத்தின் கிஷ்த்வார் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

காஷ்மீர் மீதும், இந்தமாநில மக்கள் மீதும் நான் உளப் பூர்வமாக அன்பு வைத்துள்ளேன். கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் நான் உங்களைச்சந்திக்க இங்கு (காஷ்மீர்) வருகிறேன். இது மற்ற கட்சியினருக்கு ஆச்சரியத்தை தருகிறது.

அரசியலையும், மதத்தையும் இணைத்து மேற்கொள்ளப் படும் பிரசாரத்தை நான் எதிர்க்கிறேன். தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே தாரகமந்திரமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னெடுத்த திட்டங்கள், அவரது கனவுகளை நான் நிறை வேற்றுவேன். ஜனநாயகம், மனிதநேயம், காஷ்மீரியரின் தனித்துவம் என்ற வாஜ்பாயின் மூன்று வார்த்தைகள் காஷ்மீர் மக்களின் மனதில் அழியாமல் உள்ளது. அதன் அடிப்படையிலான வளர்ச்சியில், நல்ல எதிர் காலம் கிடைக்கும் என்று காஷ்மீர் இளைஞர்கள் நம்புகின்றனர்.

எனவே அதனை நிறைவேற்றுவதே எனது விருப்பம். அதற்காகவே காஷ்மீருக்கு நான் தொடர்ந்துவந்து கொண்டிருக்கிறேன். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று காஷ்மீர் மக்கள் நம்பினர். ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பத்தாண்டுகளில் இங்கு நிலைமை என்னவானது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தண்ணீர் வாளியில் ஓட்டை இருந்தால் நீர் எப்படி ஒழுகிச்சென்று விடுமோ, அதுபோல காஷ்மீருக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் பணம் எங்கேபோகிறது என்பதே தெரியவில்லை.

காஷ்மீரின் வளர்ச்சியை, கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்ட அரசுகள் முடக்கிவிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க இரண்டு குடும்பங்கள் (தேசிய மாநாட்டு கட்சி – அப்துல்லா குடும்பம், மக்கள் ஜனநாயகக் கட்சி – முஃப்தி குடும்பம்) மட்டும்தான் உள்ளதா? மற்றவர்கள் யாரும் மாநிலத்தை ஆளும்தலைவராக முடியாதா? காஷ்மீரில் மாறிமாறி ஆட்சி புரிந்த இரு கட்சிகளும் ஊழல்செய்தன. அவர்களை நீங்கள் தண்டிக் காவிடில், புது வேகத்துடன் உங்களை ஏமாற்ற மீண்டும் வந்து விடுவார்கள்.

வெள்ளத்தால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சேதாரம், இழப்புகள் குறித்து மாநில அரசுக்கு தெரியவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கை நான் நேரடியாகப் பார்வையிட்டேன். வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. நான் உங்கள் வளர்ச்சிக்காகவே இருக்கிறேன். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் போக்குவரத்து, சுற்றுலாத் துறையில் மேம்பாடு உருவாகும் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன் என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.