இந்தியா உள்ளிட்ட 8 தெற்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இரண்டு நாள் நடைபெறுகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று காத்மாண்டுக்கு செல்கிறார். அவருடன், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் செல்கிறது. 'சார்க்' நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுதான் 'சார்க்' மாநாட்டின் நோக்கம் ஆகும். 26-ந்தேதி, காத்மாண்டுவில் பிரிகுதிமண்டப் என்ற இடத்தில் உள்ள சிட்டி ஹாலில் மாநாடு தொடங்குகிறது.

மாநாட்டில், 8 நாடுகளின் தலைவர்களும் தங்கள் கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார்கள். மறுநாள் (27 -ந்தேதி) அனைத்து தலைவர்களும் துலிகேல் என்ற இடத்தில் நடைபெறும் அமர்வுக்கு செல்கிறார்கள். அங்கு அன்று மாலையில், காத்மாண்டு பிரகடனம் வெளியிடப்படுகிறது.

மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நேபாள பிரதமரை சந்தித்து பேசுகிறார். அபிவிருத்தி உதவி, ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி, சுற்றுலா போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பிற நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் பிரதமர் மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பை இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்களும் மறுக்கவில்லை. எனவே, இருவரும் சந்திப்பார்கள் என கருதப்படுகிறது.

ஏற்கனவே, மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தபோது, இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். எனவே, இது இவர்களின் இரண்டாவது சந்திப்பு ஆகும். இதற்கிடையே, மாநாட்டையொட்டி, காத்மாண்டுவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய சாலைகளில், நேபாள ராணுவத்தின் ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடக்கும் அரங்கைச் சுற்றி ராணுவம் அணிவகுப்பு ஒத்திகை நடத்தியது. தலைவர்களை வரவேற்க நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.