அசாம் மாநில தலை நகர் கவுகாத்தியில் வரும் 29, 30–ந்தேதிகளில் 2 நாட்கள் எல்லா மாநில உயர் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்கும் கருத்தரங்கு நடைபெறுகிறது . இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் விவாதம் நடத்த உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த கூட்டத்தில் முக்கியமுடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 30–ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 29–ந்தேதி கூட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் கவுகாத்தியில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு நடத்தும் சமயத்தில் அல்லது அதற்கு முன்பு மிகப் பெரிய நாசவேலையில் ஈடுபட உல்பா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் குண்டு வெடிப்புகளை நடத்த உல்பா தீவிரவாதிகளின் மூத்த தலைவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று இருப்பதும் தெரிய வந்தது.

பிரதமர் மோடி செல்லும் வழியில் அங்கு அடுத்தடுத்து குண்டு வெடிப்புகளை நடத்தவேண்டும். மற்றும் கவுகாத்தியில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தவேண்டும் என்பன போன்ற திட்டங்களுடன் உல்பா தீவிரவாதிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது இந்த திட்டத்துக்கு அசாமில் தளம் அமைத்து இருப்பதாக கூறப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளும் உதவிகள் செய்து வருவதாக உளவுத் துறையினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அசாம் மாநில போலீசுக்கு உளவுத் துறையினர் தகவல் கொடுத்து உஷார்படுத்தினார்கள். அதன் பேரில் கவுகாத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவ வீரர்கள் அங்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அசாமில் ரங்கியா சப்டிவிசனில் உள்ள கெண்டுகோனா ரெயில் நிலையத்தில் இண்டர்சிட்டி ரெயிலை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அப்போது ஒருபெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பிளாஸ்டிக்பை கிடந்தது. அதை ஆய்வுசெய்த போது, அதில் 7 கிலோ அளவுக்கு வெடிகுண்டுகள் இருப்பது தெரிந்தது.

அதில் ஒருவெடிகுண்டு 5 கிலோ எடைகொண்டதாக இருந்தது. அந்த குண்டு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் வெடிக்க செய்யும் அந்த வெடிகுண்டுகளை உடனடியாக நிபுணர்கள் செயல் இழக்கசெய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியை குறி வைத்து இந்த சக்திவாய்ந்த குண்டு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். மோடி அசாமில் இருக்கும் 30–ந் தேதி பல இடங்களை தகர்த்து நாசவேலை செய்யவே உல்பா தீவிரவாதிகள் இந்தகுண்டுகளை எடுத்து வந்துள்ளனர்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக கவுகாத்தியில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தொலைவுக்கு முன்பே அந்த வெடிகுண்டுகள் சிக்கிவிட்டன. இதனால் மிகப்பெரிய நாச வேலைக்கான சதி திட்டம் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.