வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் திருவள்ளுவர் பிறந்ததினம் கொண்டாடப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை எழுப்பிய கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கண்ட தகவலை ஸ்மிருதி இரானி வெளியிட்டார். மாநிலங்களவையில் தருண் விஜய், வெள்ளிக்கிழமை பேசியவதாவது:

ஒரு நாடு வளம்பெற வேண்டுமானால் அதில் பேசப்படும் மொழிகள், கலாசாரம் மதிக்கப்பட வேண்டும். நாகரிகமும், உறவுகளும் வலுப்பெற மொழிகள் தடையாக இருக்கக் கூடாது. அவை பாலமாக இருக்க வேண்டும். மொழி என்பது எழுத்துகளையும், வார்த்தைகளையும் மட்டுமே கொண்டது அல்ல. அது ஒரு சமுதாயத்தின் நாகரிகம், உணர்வுகள், வண்ணங்கள், கலைகள், கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபதிலிப்பாகும்.

இந்தியாவின் சிறந்த அறிவாற்றலையும் அடையாளத்தையும் உலகம் முழுவதும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ் போற்றப்படுகிறது. "பூமியின் நினைவுகள்' என்ற பதிவை யுனெஸ்கோ அமைப்பு சேகரித்த போது, இந்தியாவின் அடையாளமாக "தமிழ்' மொழியை 2005-இல் தேர்வு செய்தது. அப்படிப்பட்ட தமிழ் மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்போல விளங்குகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் வாழ்ந்தவர் திருவள்ளுவர். உலகம் போற்றும் பொதுமறையை அவர் தமிழ் மொழியில் தான் வழங்கினார். அதன் பெருமையையும், பயனையும் உணர்ந்த உலக நாடுகள் பலவும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அவற்றின் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து தங்கள் குடிமக்களுக்குக் கற்பித்து வருகின்றன.

ஆனால், வட மாநிலங்களின் பல நகரங்களுக்கு நான் செல்லும் போது அங்குள்ள இளைய தலை முறையினரிடம் "திருவள்ளுவரை தெரியுமா? திருக்குறளை படித்தீர்களா?' என்று கேட்பேன். ஆனால், "அது என்னது?' என்று அவர்கள் வியப்புடன் என்னிடம் கேட்கின்றனர். இது துரதிருஷ்ட வசமானது.

நம் நாட்டில் குறிப்பாக வடமாநிலங்களில் வால்மீகி, துளசிதாஸ் ஆகியோரை மட்டும் நாம் மொழிப்புலமை வாய்ந்தவர்களாக போற்றுகிறோம். அவர்கள் மட்டுமே இந்தியாவின் அடையாளம் அல்ல. திருவள்ளுவர், கண்ணகி, சுப்பிரமணிய பாரதி போன்றோரைப் பற்றி குறிப்பிடாமல் இந்தியாவின் அடையாளத்தை நம்மால் முன்னிலைப்படுத்த முடியாது. எனவே, தமிழை கௌரவிக்கும் வகையிலும் திருக்குறளின் பெருமையை இந்தியர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் "திருவள்ளுவர்' பிறந்த நாளை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வட மாநில பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். இப்போன்ற நடவடிக்கைகள்தான் தென்னகத்துக்கும் வடக்குக்கும் இடையிலான பாலத்தை வலுப்படுத்தும்'

முன்னதாக, தருண் விஜய் திருக்குறள் குறித்து பேசத் தொடங்கும் போது "தமிழ் அன்னைக்கு முதல் வணக்கம்' என்று தமிழில் கூறி, ஹிந்தி மொழியில் உரையை வாசித்தார். இதேபோல உரையின் இடையே, திருக்குறளின் முதலாவது குறளான

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

என்று கூறி திருவள்ளுவரின் சிறப்பை விளக்கினார்.

உறுப்பினர்கள் ஆதரவு: அவர் பேசி முடித்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், கே.ஆர். அர்ஜுனன், டாக்டர். மைத்ரேயன், டி. ரத்னவேல், விஜிலா சத்யானந்த், ஏ.கே. செல்வராஜ், எஸ். முத்துக்கருப்பன், திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் "தங்களையும் தருண் விஜய் கோரிக்கையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்று அவையில் பதிவுசெய்தனர்.

ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் வர்மா, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் அகமது ஹசன், காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோரும் தருண் விஜய் முன்வைத்த கோரிக்கையை மேஜையைத் தட்டி வரவேற்றனர். இதைப் பார்த்த அவையில் இருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தருண் விஜய் கோரிக்கையை ஆமோதிக்கிறேன் என்று கூறினார்.

பின்னர் மாநிலங்களவை அலுவல் முடிந்ததும் தருண் விஜயை தனது அலுவலகத்துக்கு வரவழைத்த ஸ்மிருதி இரானி, "திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் நானும் அறிந்துள்ளேன். நாம் செய்யத் தவறியதை நாடாளுமன்றத்தில் அருமையாக சுட்டிக்காட்டி உணர்த்தியுள்ளீர்கள். உங்கள் கோரிக்கைப்படியே அடுத்த ஆண்டு முதல் வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன்' என்றார்.

தருண் விஜய் எம்பி தமிழின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பேசிவருகிறார். இது தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில், தமிழுக்காக குரல் கொடுத்து வருவதற்காக தருண் விஜய் எம்பி க்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் தை பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் தினமாகும், திருவள்ளுவர் தினமாகவும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இனி அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் வடமாநில பள்ளிகளிலும் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது மத்திய அரசு.

இதுபற்றி கவிஞர் வைரமுத்துவிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:–

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கும் கிடைத்த வெற்றி இது. திருக்குறளை உயர்த்தி பிடிக்க பாடுபட்ட, போராடிய அனைத்து தமிழர்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த பெருமை.

பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் சொல்வதை விட தருண் விஜய் சொல்வதில் அழுத்தம் அதிகம்.

வெற்றித்தமிழர் பேரவை சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தியபோது நான் சொன்னேன். 'காளிதாசனையும், வால்மீகியையும், தாகூரையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இளங்கோவடிகளையும், கம்பரையும் திருவள்ளுவரையும் நீங்கள் கொண்டாடலாமே' என்றேன்.

இது முதற்கட்ட வெற்றி தான். நான் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன்.

Leave a Reply