உங்களது வலி எனது வலி. உங்கள் பிரச்சினை எனது பிரச்சினை. காஷ்மீரை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி தந்துள்ளார்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு உரி ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப்படை வீரர்கள், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மிகுந்த பாதுகாப்புக்கு நடுவே பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல்பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது, இந்த தேர்தல் காஷ்மீரில் பெரும்மாற்றத்தை உருவாக்கும் என்று எண்ண தோன்றுகிறது. காஷ்மீர் மாநில மக்கள், வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்பு, அடிப்படைவசதிகள் ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் என்பது எனக்குதெரியும். இளைஞர்கள் வேலை கேட்கின்றனர். விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர்கேட்கின்றனர். குழந்தைகள் நல்ல கல்வியை கேட்கின்றன. வயதானவர்கள் நல்லமருத்துவ கவனிப்பு தேவை என்கின்றனர். எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் பிரச்னைகளை தீர்க்கப்பட்டு வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, தந்தையும் மகனும் (தேசிய மாநாட்டு கட்சி), தந்தையும் மகளும் (மக்கள் ஜனநாயக கட்சி) மாறி மாறி செய்த ஆட்சியை நீங்கள் (பொதுமக்கள்) பார்த்து விட்டீர்கள். இவர்களது ஆட்சியில் எதைக் கண்டீர்கள்? தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட அவர்கள், உங்களுக்காக எதுவும் செய்யவில்லை.

இந்த மூன்றுவிதமான பரம்பரை ஆட்சியாளர்களிடமிருந்தும் விடுபடுவதற்கு பாஜகவுக்கு ஒருமுறை வாய்ப்பு அளியுங்கள். உங்கள் கனவை நாங்கள் நனவாக்கிக் காட்டுகிறோம். ஊழல் இந்த மாநிலத்தை சீரழித்துவிட்டது. இங்கு தீவிரவாதம் முடிவுக்கு வந்தாலும் ஊழல் முடிவுக்கு வரவில்லை. இத்தகைய ஊழலுக்கு முடிவுக்கட்டுவதே நம் முன்பு உள்ள மிகப்பெரிய சவால்.

காஷ்மீர் மக்கள் என் மீது அதிக நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையையும் அன்பையும் வட்டியுடன் சேர்த்து வளர்ச்சி வடிவத்தில் திருப்பித்தருவேன். இதற்காக எனது உயிரையும் இழக்க தயாராக உள்ளேன்.

உங்கள் வலி எனது வலி. உங்கள் பிரச்சினை எனது பிரச்சினை. நாட்டின் முதல்சேவகன் (பிரதமர்) என்ற முறையில் உங்களது வலியையும் வேதனையையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

தீவிரவாத தாக்குதலுக்கு ராணுவவீரர்கள், போலீஸார், பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர். இத்தகைய இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அந்த வேதனையை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களது குடும்பத்தினரின் வலிகுறையும்.

கடந்த 2003-ம் ஆண்டு இதே இடத்தில் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 21ம் நூற்றாண்டில் காஷ்மீர் வளர்ச்சிப்பாதைக்கு திரும்புவதற்கு சமூக நல்லிணக்கம், மனிதத்தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய மூன்று முக்கியதூண்களை வலிமையாக்குவது அவசியம் என வலியுறுத்தினார். அவரது கனவை நனவாக்கு வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். என்று மோடி தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பதாமி பாக் தலைமை யகத்துக்குச் சென்ற நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்குள்ள போர் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.