"தமிழா, தெய்வத்தை நம்பு!" என்று எச்சரித்து வைத்தான் பாரதி.நாத்திகப் போர்வையில் அதிகார பீடங்களில் நாராசம் நடனமிடப் போகிறது என்று சூட்சும தரிசனத்தால் தெரிந்துகொண்டானோ? அதனால்தான் "தமிழா, பாரதியைப் பார்" என்று இன்று சொல்கிறோம்.உலகமும் தேசமும் ஊரும்

உருப்படும், வருங்காலம் பொற்காலம் ஆகும் என்பதற்கு அர்த்தமுள்ள அறிகுறி கண்ணில் படுவதால்! "அனைத்துக்கும் பாரதிபோல் ஆசைப்படு" என்று சொல்லத் துணிகிறோம்!

மீசைக் கவிஞன், முண்டாசுக் கவிஞன் என்று தளுக்குத் தமிழ் பேசி, பாரதியாரின் ஒரு சித்திரத்தை மக்கள் மனங்களில் பதியச் செய்திருக்கிறார்கள், சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோர்.

ஆர்.எஸ்.எஸ்.காரரோ பாரதியிடம் தன்னையே காண்கிறார். புரிய வில்லையா?

நமது தேசம், தொன்மையான தேசம்,இது ஒரே தேசம்,இது ஹிந்து தேசம் – ஸ்வயம்சேவகனின் மனதில் பயிற்சியால் பதிந்துள்ள சத்தியம் இது. "சேசமில்லாத ஹிந்துஸ்தானம், இதை தெய்வமென்று கும்பிடு" என்று பாரதி பிறப்பித்த ஆணையைப் பிரதி தினமும், ஆர்.எஸ்.எஸ்காரர் (இனி ஸ்வயம் சேவகர் என்போமே?) நெஞ்சின் குறுக்கே கை மடித்து வைத்து, பிரார்த்தனையகப் பாடுவது வெறும் ஆச்சாரமல்ல, அர்த்தம் பொதிந்தது.

தேசத்தின் தொன்மை, மேன்மை மிகுந்த பொற்காலம் என்பது ஸ்வயம்சேவகரின் திடமான வரலாற்றுப் பிரக்ஞை. இடையில் வீழ்ச்சி ஏற்பட்டதை ஒப்புக் கொள்பவர் அவர். காரணம், மறுபடியும் அந்தப் பொற்காலம் காணும் வேட்கை கொண்டவர் அவர், பாரதி போலவே!

பாரதியின் 'பாஞ்சாலி சபத'த்தில் அரசவையில் அவமானப் படுத்தப்பட்ட திரௌபதியைப் பார்த்து பீஷ்மரை இப்படிப் பேச வைக்கிறான் பாரதி: "பண்டைய யுக வேத முனிவர் விதிப்படி", தர்மன் உன்னை வைத்து சூதாடியது தவறு. ஏனென்றால் 'ஆணோடு பெண் முற்றும் நிகரானவள் அந்நாளில் பேணிவந்தார்கள். இன்றோ 'ஆடவருக்கு ஒப்பில்லை மாதர்; ஒருவன் தன தாரத்தை விற்றிடலாம்'. இந்த அநீதிதான் இன்று சாத்திரம்".

இதற்கு மறுமொழியாக திரௌபதி, "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என்று சீறுவதாகக் கூறி பாரதி தன் சீற்றம் காட்டுகிறான். (தேசத்தின் தொன்மை, மேன்மை வாய்ந்தது என்பதை அடித்துச் சொல்ல பாரதிக்கு இருந்த நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்பதில் வியப்பில்லை!).

பெண்ணை மட்டுமல்ல, பண்டைய பாரதத்தில் விஞ்ஞானத்தையும் போற்றினார்கள் என்பதை பாரதி பதிவு செய்திருக்கிறான். அவன் காலத்தில் ஒரு வாழ் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. அதன் பலா பலன்களை மட்டும் சோதிடர்கள் பேசினார்கள். அதன் அறிவியல் விளக்கத்தை அன்னியன் சொல்லித்தான் மக்கள் தெரிந்துகொண்டார்கள். குமுறினான் பாரதி: "பாரத நாட்டில் பரவிய எம்மனோர் நூற்கணம் மறந்து பன்னூறாண்டு ஆயின" என்று.

ஏனென்றால் ஸ்வயம்சேவகருக்குத் தெரிவது போல "உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்தோர் பாஸ்கரன் மாட்சி" பாரதிக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணையும் இன்றைய இளைஞர் ஒருவருக்கு ஓராண்டிற்குள் (பௌத்திக், சர்ச்சா, கதை, பாடல் வாயிலாக) "பாரதத் தாயின் பழமை, பெருமை" மனதில் பதிந்து விடுகிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

"நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிற ஹிந்து சமுதாயத்தை ஒரே குடும்பம் போல ஆக்கிவிட வேண்டும்" என்று ஆசை வெளியிட்டவன் பாரதி. அந்த ஆசை ஸ்வயம்சேவகர் வாயிலாக ஆர்.எஸ்.எஸ் செய்யும் அரும்பணியால் நிறைவேறி வருகிறது; இது தேசத்தின் கவனத்திற்கும் மெல்ல மெல்ல வருகிறது. எனவே தேசம் ஸ்வயம்சேவகரை நாடுகிறது.

ஹிந்து ஒற்றுமை, தேசத்திற்கு வலிமை சேர்க்கிறது. வலிமையின் பின்பலம் கண்ட தேசம் சொல்வதை கேட்க விழைகிறது உலகம். (அண்மையில் 54 தேசங்களிலிருந்து ஹிந்து பிரதிநிதிகள் வந்து டில்லி உலக ஹிந்து மாநாட்டில் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ஒன்றுபட்ட ஹிந்து சக்தியின் அருமையை உலகம் உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது யென்று கூறியது குறிப்பிடத்தக்கது.)

திலகர் மறைந்து (192௦) தேசத்திற்குள் காந்தி தலையெடுக்காத காலகட்டத்தில் (1921) பாரத மாதாவிடம், ராமன், கண்ணன், புத்தன், நானக் போல ஒருவர் தேவை; "எம்முன் வந்து நீதியின் இயலை செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ" என்று கோரிக்கை வைத்தான் பாரதி. பாரதி கேட்ட 'சேவகன்', இன்று ஸ்வயம்சேவகர் என்ற வடிவில் தேசத்தின் எல்லாத் துறைகளிலும் நீதியை நிலைநாட்டுவதில் தோன்றாத் துணையாக வியாபிக்கிறார்.

வாடிக்கையாக சமநீதி பேசுகிறவர்கள் கண்ணில் படாதது – ஸ்வயம்சேவகர் உள்ளத்திலிருந்து பாரதியின் உள்ளத்திலிருந்தும் நீங்காது – சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள அன்பர்களின் நல்ல பண்பு. (ஸ்வயம்சேவகரான பிரதமர் நரேந்திர மோடி ஜன தன திட்டத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தையும் வங்கிக் கணக்கு துவங்கச் செய்யும்படி அறைகூவல் விடுத்தார். மினிமம் பேலன்ஸ் இல்லாமல் கணக்கு தொடங்கலாம் என்று எளியவர்களுக்கு வசதியும் செய்து கொடுத்தார். ஆனால் சாமானியர் மனது நல்லபடியாக இருந்தது. தொடங்கப்பட்ட கனகுகளால், வங்கிகளில் 46,000 கோடி ரூபாய் சேர்ந்தது. இதை பல முறை எடுத்துச் சொல்லி சாமானியரின் நல்ல தனத்தை நாடறியச் செய்தார் அந்த ஸ்வயம்சேவகர்!).

கண்ணனை 23 விதங்களில் கண்ட பாரதி அவனை ஆண்டானாக (முதலாளியாக) பாவித்து தொழிலாளியாக நின்று கோரிக்கை வைக்கிறான், இப்படி: "மானத்தைக் காக்கவோர் நாலுமுழத் துணி வாங்கித் தர வேணும்; தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித் தரவுங் கடன் ஆண்டே!" அடித்தட்டினர் மனதின் ஆசையை "அண்டை அயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டுமையே!" என்று தெளிவாக விண்டு வைக்கிறான் பாரதி.

ஸ்வயம்சேவகர் ஊரார் உறுதுணையுடன் ஒன்றரை லட்சம் தொண்டுப் பணிகள் நடத்தலாம்; ஆனால் 'இன்று நன்மை அடைபவர் நாளை பிறருக்கு நன்மை செய்பவர் ஆகிட வேண்டும்' என்ற அடிநாதமான நோக்கம் நிறைவேறுவதில் அவர் முனைப்பாக இருப்பார். அதுதான் அர்த்தமுள்ள சேவை என்று அவருக்குத் தெரியும். அவார்டுகள் வாங்க சோசியல் சர்வீஷ்களில் இறங்குகிறவர்களுக்குத் தெரியாது.

'ராஜேந்திர சோழனுக்கு விழா ஆர்.எஸ்.எஸ் நடத்துவதா, என்ன சம்பந்தம்?' என்று எல்லாம் தெரிந்தவர்கலாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் கேட்டார்கள்; வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். ஸ்வயம்சேவகர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் சொல்லும் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் ராஜேந்திர சோழன் பெயர் இருப்பது சுட்டிக்காட்டப் பட்டது.

அதே தொனியில் 'ஸ்வயம்சேவகர் பாரதியிடம் தன்னையே காண்பதாவது?' என்று புதிராகப் பார்ப்பவர்களுக்கு (பலரும் அறியாத) பாரதியையும் எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது, அதே ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில், "ஸ்ரீ சுப்ரமணிய பாரதி" என்ற வரி இருப்பதை சுட்டிக்காட்டுவதுடன் ஸ்வயம்சேவகரின் பண்புப் பதிவுகளையும் தேசதிருக்கு அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

நன்றி : விஜய பாரதம்

–    காந்தாமணி நாராயணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.