மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்தநாளை நாடுமுழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தில் முதன்முறையாக பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அலிகர் பல்கலைகழகத்தின் பெண்ணியக் கல்விமையம் சார்பில், தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான பாரதியாரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. 'பாரதியாரின் பாடல்கள் உணர்த்தும் தேசியக்கோட்பாடுகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த சொற்பொழிவில் அப்பல்கலைக் கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறையின் பேராசிரியர் து.மூர்த்தி உரையாற்றினார்.

"பெண்ணிய உரிமைக்கு பாரதியார் தீவிரமாக ஆதரவளித்தார். சமூகத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிராக வாதிட்டு ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்று முழங்கினார். பாரதியாரின் கொள்கைகளின் படி, வேலைப் பிரிவினைகள் மற்றும் ஊதியங்களில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கினால் அவர்களுக்கு சுயமரியாதை கிடைக்கும்" என மூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, பாரதியாரை பற்றிய அறிமுக உரை நிகழ்த்திய அதே பல்கலை கழகத்தின் வரலாற்று துறை உதவிபேராசிரியர் எஸ்.சாந்தினிபி, பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சிற்றுரை வழங்கி அமர்வைத் தொடங்கி வைத்தார். இதில் அவர், பாரதியாரைப் பற்றி வடஇந்தியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் முக்கிய சம்பவங்கள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.

உத்தராகண்ட் மாநில பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய், பாரதியார் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

இதன் அடிப்படையில், நாடுமுழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் பாரதியார் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு, சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply