அகில இந்திய பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.

அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்க பாஜக ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாளை மாலையில் மறைமலைநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.

அதற்காக தமிழக சட்டசபை வடிவத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்ட திடலில் சுமார் 1 லட்சம்பேர் அமர இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட மேடை நிகழ்ச்சி அனைவருக்கும் தெளிவாக தெரியும்வகையில் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. அதை தொடர்ந்து 4 மணிக்கு பொதுக் கூட்டம் தொடங்குகிறது.

மாலை 5 மணியளவில் அமித்ஷா பொதுக்கூட்ட மேடைக்குவருகிறார். இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம் நிறைவு பெறுகிறது.

மறுநாள் (ஞாயிறு) காலையில் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

பிற்பகலில் குரோம் பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக உறுப்பினர்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் அங்கிருந்து விமானநிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஏற்கனவே தமிழ் நாட்டின் மீது தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:–

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பா.ஜ.க தொண்டர்கள் வருகிறார்கள். எப்படியும் ஒருலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தனிபார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அமித்ஷாவின் வருகை தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமாநில தேர்தல்களை சந்தித்து திட்டமிட்டு சாதித்துகாட்டியவர். அவரது வழிகாட்டுதலும், அறிவுரைகளும் கட்சியில் ஊக்கத்தை உருவாக்கும் .

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியே எங்களது செயல் பாடுகள் அமையும். அமித் ஷாவின் வருகையும், செயல்திட்டங்களும் நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.