கட்டாய மதமாற்றப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரதமர் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்தாக வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து அவை நடவடிக்கைகள் நடக்கவிடாமல் தொடர்ந்து தடுக்கின்றன. பிரதமர் பதிலளிக்கப் போகிறாரா, எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரச்னை விவாதத்திற்கு வந்திருக்கிறதே. அதுவே பெரிய மாற்றம்.

ஆக்ராவில் வேதநகரத்தில் 350 முஸ்லிம்கள் ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசியுடனும், ஆதரவுடனும் நடத்தப்பட்டது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்புகின்றன. அவர்கள் சொல்வது போல ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன்தான் இது நடத்தப்பட்டது என்றால் அந்த அமைப்பு சாதூர்யத்துடன் செயல்பட்டிருக்கிறது. இது ஒரு சின்ன நடவடிக்கைதான் என்றாலும் சுறுசுறுப்பான, புத்திசாலித்தனமான செயல்பாடு!

மதமாற்றம் தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம் அதைத் தவிர்க்கவும், திசை திருப்பவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாடவும் விமர்சிக்கவும் செய்துவந்தவர்களுக்கு இது ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எந்த விவாதத்தை அவர்கள் தவிர்த்து வந்தார்களோ, அந்த விவாதத்தை அவர்களே இப்போது எழுப்ப வித்திட்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எப்போதுமே தந்திரமான எண்ணம் இருந்ததே இல்லை. இந்துக்களுக்கு குயுக்தியான எண்ணம் இல்லாததில் வியப்பொன்றும் இல்லை. மதம், கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, பிற மதத்தினரைத் தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது. அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும் கிடையாது.

"தி எகானமிஸ்ட்' சஞ்சிகை, 2013 மார்ச் 30-ஆம் தேதி இதழில், இந்தியாவுக்கு கலாசார சிந்தனையோ விழிப்புணர்வோ போதிய அளவு இல்லை; அதுதான் அந்த நாடு வல்லரசாவதற்குத் தடைக்கல்லாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது உண்மை. இந்துக்களிடம் எதிர்மறையான சிந்தனை இல்லை. அதற்கான தேவையும் இல்லை. இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகூட, தாமதமாக எழுந்ததுதான்!

மனிதநேயத்துடன்கூடிய இந்து சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோள். இந்தியத் திருநாட்டை "இந்து ராஷ்ட்டிரம்' என்று அழைக்க வேண்டும் என்று விரும்புவது உண்மை. அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியான, வேறுபாடு இல்லாத கலாசாரத்தையும், முன்னோர்களையும் கொண்டவர்கள் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திடமான நம்பிக்கை. உண்மையாகவும் நியாயமாகவும் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தில் தவறு காண முடியாது. இந்திய முஸ்லிம்கள் ஒன்றும் அராபியர்களின் வாரிசுகள் அல்லர்; கிறிஸ்தவர்களும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களா என்ன?

இந்தியாவில் வாழும் பல கோடி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்பிக்கையால் அந்த மதத்தைச் சார்ந்தவர்களே தவிர, அடிப்படையில் இந்தியர்கள், இந்துக் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள். இல்லையென்றால், இவர்கள் ஏன் இன்னும் தாலி கட்டுவது, கிறிஸ்துவ தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் திருவிழா நடத்துவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களது நம்பிக்கை மாறி இருக்கிறதே தவிர, அவர்களது அடிப்படைக் கலாசாரம் மாறவில்லை என்பதைத்தான் அவை காட்டுகின்றன.

1901-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் 6.6 கோடி முஸ்லிம்களில் வெறும் 3.5லட்சம் பேர்தான் தங்களை மொகலாய பரம்பரையினர் என்று கூறியுள்ளனர். இந்த கூற்றுப்படி இந்திய பரம்பரையைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைத் தேசிய நீரோட்டத்தில் ஒன்றிணைக்கும் முயற்சியில்தான் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.

அனைவரையும் மனிதநேயத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும். யாரிடமும் பகைமை கொள்ளக்கூடாது என்பதை 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற உலக மதத்தலைவர்கள் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தினார். ஒருங்கிணைப்பது எதையும் அழிப்பதாகாது. ஏனெனில் இது மதமாற்றம் அல்ல.

நோபல் பரிசுபெற்ற அறிஞர் வி.எஸ்.நைபால், "மதமாற்றம் என்பது கடந்தகால நிகழ்வுகளை, வரலாறுகளை முற்றிலும் அழித்துவிடுவது, என் முன்னோர்களுடைய கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என ஒருவரை அவரது பல தலைமுறை பாரம்பரியத்திலிருந்து வேரறுத்து விடுவது' என்கிறார். மதத்தை மாற்றுவதன் மூலம் அந்த மனிதனுடைய மண்ணின் மாண்பை அழித்து விடுவதுதான் அடிப்படைக் குறிக்கோள். இந்தியாவில் அது முழுமையாக எடுபடவில்லை என்பதிலிருந்தே, நமது கலாசார வேர்கள் எந்த அளவுக்கு ஆழமாகப் பரவிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

டாக்டர்.அம்பேத்கரைத் தங்களது தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் போலி மதச்சார்புவாதிகளுக்கு ஆதரவாகக் குரலெழுப்புவது வேதனையாக இருக்கிறது. 1936-ஆம் ஆண்டு, ஜூலை 24-ஆம் தேதி "தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையில் அவர் மதமாற்றம் பற்றிய தனது கருத்தை மிகவும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

""மதமாற்றத்தால் நமது தேசத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், பின்விளைவுகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இஸ்லாம் மதத்துக்கோ, கிறிஸ்துவ மதத்துக்கோ மதமாற்றம் செய்யப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தளத்தில் வலுவிழக்கச் செய்துவிடும். இஸ்லாத்துக்கு மாறினால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் தொடர்விளைவாக இங்கே இஸ்லாமிய ஆதிக்கம் வலுப்பெற்று, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமலே போய்விடும். கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதன்மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துவதுடன் மேலைநாட்டு சக்திகளுக்கு நாம் அடிமைப்பட நேரிடும்.

சீக்கிய, புத்த, ஜைன மதத்திற்கு மாறுவதன் மூலம் இந்தியாவின் வருங்காலத்தையும், இந்திய நாட்டின் அடிப்படை தார்மிகக் கோட்பாடுகளையும் அது பாதிப்பதாக இருக்காது. அதன்மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் பலம் குறையாது. தேசநலன் பாதுகாக்கப்படும்'' என்று எழுதுகிறார் டாக்டர்.அம்பேத்கர்.

"மதமாற்றம் என்பது தேசத்துக்கு, கலாசாரத்துக்கு, நாம் வாழும் பகுதிக்கு அழிவை ஏற்படுத்துவது. ஒருங்கிணைப்பது என்பது இவற்றை நாம் கட்டிக்காப்பது. "பல்வேறு மதத்தினரும் இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் இந்தியா ஒரே தேசம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, அதைக் கைவிட்டு விடவும் முடியாது' என்று மகாத்மா காந்தியே கூறியிருக்கிறார்.

வெளிநாட்டினர் இங்கு வருவதால் தேசம் சீர்குலைந்துவிடாது. அவர்களும் நம்மோடு இணைந்து செயல்பட வேண்டும், நமது கலாசார பழக்கவழக்கங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும், அவ்வளவே! அனைவரும் ஒருங்கிணைவோம் என்று ஆர்.எஸ்.எஸ். சொன்னால், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், மகாத்மா காந்தி, விவேகானந்தர் கூறியதை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது வகுப்புவாத முத்திரை குத்துகின்றனர்.

இதுநாள்வரை மதமாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் மட்டும்தான் என்பதையும், இந்தியாவிலுள்ள இந்துகள் அல்லாதவர்கள் அனைவரும் இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. மதமாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்று இந்து அமைப்புகள் நெடுங்காலமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் வாக்கு வங்கிக்காகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

இப்போது ஆக்ராவில் முஸ்லிமாக மதம் மாறியவர்கள் மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம் மதமாற்றம் என்பது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னை என்று வாக்குவங்கி அரசியலுக்காகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டவர்களைப் பேச வைத்திருக்கிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடைசெய்யச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரியபோது, மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், இது மதச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும் என்பதுபோல் கருத்துத் தெரிவித்தனர். இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மதமாற்றம் செய்வது சரியென்றால், வேறு மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்வது மட்டும் எப்படித் தவறாக இருக்க முடியும்?

மத்தியப் பிரதேச மாநிலமும், ஒடிஸா மாநிலமும் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தபோது 1967-இல் உச்ச நீதிமன்றம் அது சரியான நடவடிக்கை என்று கூறியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட நியோகி குழு விசாரணை நடத்தி, அப்பாவிப் பழங்குடியினர் ஆசை காட்டியும், மோசடியாகவும், வலுக்கட்டாயமாகவும், தூண்டுதல் பேரிலும் மதமாற்றம் செய்யப்படுவதாக தனது அறிக்கையில் கூறியது. இதைத் தொடர்ந்து அங்கே மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், கிறிஸ்துவ தேவாலயங்கள் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றன. அரசமைப்புச் சட்டம் 25 பிரிவு (1)-இன் கீழ் ஒருவர் ஒரு மதத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையும், அந்த மதத்திற்காகப் பிரசாரம் செய்யும் உரிமையும் தடுக்கப்படுவதாக வாதிட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. மதப்பிரசாரம் என்பது தங்கள் மதத்தின் கொள்கைகளை எடுத்துக்கூறுவதுதான். வேறு ஒரு மதத்தவரைத் தங்களது மதத்துக்கு மதமாற்றம் செய்வதற்கான உரிமையாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடிசெய்துவிட்டது.

மதப்பிரசாரம் என்பதும் மதமாற்றம் என்பதும் ஒன்றல்ல. மதப்பிரசாரம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று; ஆனால் மதமாற்றம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை என்பது தெளிவாகிறது.

மதச்சார்பற்ற கட்சியோ அல்லது அதன் தலைவர் என்று கூறிக்கொள்பவர்களோ 1977-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மதப்பிரசாரம், மதமாற்றம் பற்றி கூறிய விளக்கத்தை நாடாளுமன்றத்தில் சொல்லத் தயாராக இருக்கிறார்களா? அப்படிச்செய்தால் அவர்கள் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டதையும் கூறவேண்டியிருக்கும். ஆக்ரா மதமாற்ற சம்பவத்தைத்தான் அவர்கள் பெரிதுபடுத்திப் பேசுகிறார்களே தவிர, மதமாற்றம் பற்றி விவாதிக்க அவர்கள் தயாராக இல்லை.

ஏழை இந்துக்கள் ஆசைவார்த்தை காட்டி முஸ்லிமாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதமாற்றம் செய்யப்படுவதை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ளும் மதச்சார்பற்ற கட்சிகளும் காட்சி ஊடகங்களும் ஆக்ரா சம்பவத்தை மட்டும் சுட்டிக்காட்டி ஏதோ நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டதுபோல் ஓலமிடுகிறார்களே என்? மதமாற்றம் செய்வதை ஏதோ தங்களது ஏகபோக உரிமையாக ஒரு சில மதங்கள் மட்டுமே கடைபிடிக்கும் என்று சொன்னால் பெருவாரியான இந்துக்கள் ஏமாளிகளா?

ஆக்ரா மதமாற்ற சம்பவத்தைத் தொடர்ந்து குரல் எழுப்பும் மதச்சார்பற்றவர்கள், மதமாற்றத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சொன்னபோது ஏன் வாயடைத்துப் போனார்கள்?

கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய மத்தியில் ஆளும் மோடிஅரசால் சட்டம் கொண்டுவர முடியும். அப்படிஒரு சட்டம் கொண்டுவந்தால் அதை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எதிர்ப்பார்களா, இல்லை ஆதரிப்பார்களா? எதிர்த்தால், ஆக்ரா மதமாற்ற சம்பவம் பற்றி அவர்கள் கூக்குரல் எழுப்பக் கூடாது. ஆதரித்தால், பிரச்னை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு மதமாற்றம் பற்றிய விவாதத்திற்கே இடமில்லை.

பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தியும், குரலெழுப்பியும் சாதிப்பதற்கு இயலாததை ஆக்ராவில் ஒருசில முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இப்போது சாதித்துவிட்டது. அதன்மூலம் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் தொடர்பான விவாதத்திற்கு வழிகோலி இருக்கிறது.

பின்குறிப்பு: மதமாற்றத் தடைச் சட்டம் என்பது 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற, உலக மதத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இந்துகள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவர்களும் பரஸ்பரம் ஒரு மதத்தை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும், பிற மதத்தைத் தூஷிக்கக்கூடாது, மதத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கக்கூடாது என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் தொடர்ந்து நீடிக்கவும், வேறு ஒரு மதத்துக்கு மாறுவது குறித்தும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மதமாற்றத்துக்கு நிர்பந்தமோ அல்லது தூண்டுதலோ காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் இதன் பொருள். அதைத்தானே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது?

நன்றி ; குருமூர்த்தி

நன்றி தினமணி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.