பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார் பி.ஜே.பி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

 

"கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷாவை திடீரென்று அழைத்து வருகிறீர்களே. வருகைக்கான காரணம் என்ன? சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஒரு முன்னேற்பாடா இது?

"அமித்ஷா தேசியத் தலைவர். அவர் பொறுப்பேற்ற பின்பு, பல மாநிலங்களில் நாங்கள் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டங்கள் ஆகியவைதான் தற்போது அவர் முன்னெடுக்கும் பணிகள். தமிழகத்தில் இருக்கும் 10 லட்சம் உறுப்பினர்களை ஒரு கோடியாகத் திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு மோடி என்ற ஒற்றை மந்திரம்போதும். அதை மக்களிடம் கொண்டு செல்லும் தந்திரமே அமித்ஷா. எனவே, அவர் தமிழகத்துக்கான வியூகங்களை வகுக்கப் போகிறார். இனி அடிக்கடி அவர் இங்கு வருவார்."

"இந்தி, சமஷ்கிருதக் கொள்கை போன்ற கருத்துக்களில் பி.ஜே.பி தீவிரமாக இயங்கி வருவது போலத் தெரிகிறதே?

"சிலர் திட்டமிட்டு பரப்பும் விஷமம் இது. அரசின் இணையதளங்களில் இந்தி மொழி இருந்தால், பாமர மக்களும் எளிதாக அதனை பயன்படுத்த முடியும் என்பதைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். ஆனால், இன்று அரசு வலைதளங்களில் மொழித்திணிப்பு என்று வீண்பழி சுமத்துகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தமட்டில், அன்று இந்தியை எதிர்த்தவர்களே இன்று அவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தி படிக்கவைத்து பெரிய பொறுப்பில் வைத்துள்ளனர். நாம்தான் இன்னமும் திருந்தாமல் இருக்கிறோம். இனி, இதுபோன்ற தவறான கொள்கைகளை ஆதரிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இருந்து போய் நாடாளுமன்றத்தில் இருக்கும் பலர், அங்கு என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்."

"உங்கள் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியது ஏன்? அது பி.ஜே.பி-க்கு இழப்பு அல்லா? சுப்பிரமணியன் சுவாமியின் தொடர் செயல்பாடுகள் இந்தக் கூட்டணியை உடைக்கத்தானே செய்யும்?

"ம.தி.மு.க. வெளியேறியதில் எங்களுக்குப் பெரிய இழப்பு இல்லை. வைகோ வெளியேறும்போது அவர் வெளியிட்ட வாசகங்கள் அவ்வளவு நாகரிகமானதாக இல்லை. அதைப் பார்க்கும்போது, அவர் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியேற முடிவு செய்து, அதற்காக சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சைப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அவர் பேசுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவரது கருத்தை பி.ஜே.பி-யின் கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது."

"கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி அவர்கள் மிகவும் பலமாக இருப்பதாகக் காட்டுகிறது. அதனையும் மீறி பி.ஜே.பி-யின் வளர்ச்சி எப்படி இருக்கும்?

"அது முழுக்க முழுக்கத் தி.மு.க-வின் மீதான எதிர்ப்பு அலை. அப்படியே இருந்தாலும் இப்போதைய நிலையில், அ.தி.மு.க சரியான தலைமை இல்லாமல் துவண்டு உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி 19% வாக்குகளைப் பெற்றது. இதனைப் பார்க்கும்போது மக்கள் ஒரு புதிய சக்தியை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிகிறது. பிரிவினைவாதம், நாத்திகக் கொள்கைகளைக் கொண்டு வளர்ந்த திராவிடக் கட்சிகள் இனி அதை வைத்து வளர முடியாது."

'தமிழக காங்கிரஸில் ஜி.கே.வாசனால் ஏற்பட்டுள்ள பிளவை எப்படிப் பார்க்கிறீர்கள்? குஷ்புவின் வருகை காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்குமா?"

"ஜி.கே.வாசன் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை யார் செய்தாலும் நமக்கு மகிழ்ச்சிதான். இப்போதைய தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டும் நிகழ்த்தி வருகிறார். குஷ்பு, மாநில கட்சியிலிருந்து விலகி தேசிய கட்சியில் இணைந்திருப்பதே பெரிய மாற்றம். காங்கிரஷூக்கு குஷ்புவின் வருகை மகிழ்ச்சியை அளிக்கலாம். தங்களுக்குத் தேவை குஷ்'பூ'வா? தாமரை பூவா? என்பது தமிழர்களுக்குத் தெரியும்.'

"இன்றைய தமிழக அரசின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"அவர்களைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? பால் விலை, மின் கட்டணம் என்று அப்பாவி மக்களுக்கு சுமையை ஏற்றுவதுதான் இந்த அரசாங்கத்தின் சாதனை!"

"ரஜினி?"

"விட்டுருங்கய்யா போதும்… சும்மா இருந்தவரை நாமே வருவாரா.. மாட்டாரா…? எனப் பேசி சிரமப்படுத்திவிட்டோம். வந்தால் ஏற்றுக்கொள்வோம்.. அவர் மட்டுமல்ல… யார் வந்தாலும்!" என்று முடித்தார்.

நன்றி : ஜூனியர் விகடன்
– மா.அ.மோகன் பிரபாகரன்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.