தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு வெற்றி அலை வீசுவதால் கிரண்பேடி தலைமையில் புதிய அரசு அமையும் என்று நம்புவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் .

தில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. . இதன் ஒருபகுதியாக தெற்கு தில்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது:

ஊழலை ஒழிப்போம்: தில்லியின் அடையாளத்தை மாற்ற உங்கள் ஆசி எங்களுக்குதேவை. மத்தியில் ஊழல் நிறைந்த அரசோ ஊழல்வாதிகளோ கிடையாது. நம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய போது கூறினேன்.

அதைத்தொடர்ந்து, அதிக வங்கி கணக்குகளை தொடங்கிய நாடாக இந்தியா, உலகரங்கில் சாதனை புரிந்துள்ளது. நாங்கள் ஊழலை எதிர்க்கமட்டும் செய்யவில்லை. அதை ஒழிக்கவும், வேரோடு அகற்றவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

நான் அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்த தில்லையா? என்று ஒரு சிலர் என்னை ஏளனம் செய்தனர். நான் மட்டுமல்ல மகாத்மாகாந்தி கூட அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்துள்ளார். ஒபாமாகூட இத்தகைய நன்கொடையை வழங்கியுள்ளார். ஆனால், நன்கொடை எப்படி அளிக்கப்படுகிறது என்று நாங்கள் எழுப்பிய பிரச்னையை திசை திருப்ப அவர்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) இது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

 வெளிநாடுகளின் தலைவர்கள் எனக்கு கை குலுக்கும் போது, பதிலுக்கு அவர்களுடன் குலுக்குவது எனது கை அல்ல. அது, 120 கோடி மக்களின் ஆசிர்வாதமாகும்.

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவற்றின் வளர்ச்சியை பாஜக.,வால் உறுதிப்படுத்த முடியும்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், தேர்தலுக்காக செய்வதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

இதேபோல, 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரசம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து பாதிக்கப் பட்டோருக்கு நீதி கிடைக்கவும் உரிய இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தால் அதையும் தேர்தலுக்காக செய்வதாக கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் நான் வாராணசியில் போட்டியிட்டேன். அப்போது, நான் மிகவும் மோசமாக தோற்பேன் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், மூன்று லட்சம்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். வளர்ச்சி என்பது ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது. எனது அரசியல் என்பது "வளர்ச்சி' என்ற ஒற்றை நோக்கத்தை கொண்டதாகும்.

நான் பங்கேற்கும் கூட்டங்களில் வரும் மக்கள்வெள்ளம், வேறு அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இல்லாததைக் கண்டு வியக்கிறேன். ஆனால், மக்களவை தேர்தலின் போது இந்த அளவுக்கு எனக்கு கூட்டம் இல்லாததால் என் மீது தில்லிவாசிகள் கோபமாக இருக்கிறார்களோ என்று அப்போது தில்லியைச் சேர்ந்த தலைவர்களிடம் கேட்டதுண்டு.

ஆனால், அதைமாற்றும் வகையில் இப்போது பெரும்திரளாக மக்கள்வந்து எனக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், தில்லியில் பாஜகவுக்கு தொடர்ந்து வெற்றிஅலை வீசுவதை உணரமுடிகிறது. எனவே, உங்கள் ஆதரவை வாக்குகளாக பாஜகவுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் தலை நகரான தில்லியில் நிலையில்லாத அரசு இருக்கக்கூடாது. அதன் தலை விதி தொங்கு சட்டப்பேரவை வடிவில் இருக்கக்கூடாது. எனவே, வளர்ச்சியை உறுதிப்படுத்த பாஜகவுக்கு வாக்குகளைச் செலுத்துங்கள்' என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.