டெல்லியில் நேற்று நடை பெற்ற நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டத்தில், பட்ஜெட்குறித்த பொருளாதார நிபுணர்களின் யோசனைகளை பிரதமர் கேட்டறிந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது, திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் படி, பிரதமர் தலைமையில் கடந்த ஜனவரி 1–ந் தேதி நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின்பெயர் 'இந்தியாவின் மாற்றத்துக்கான தேசியமையம்' என்று விரிவாக்கப்பட்ட பெயராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பிரபல பொருளாதார நிபுணர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர்.

நிதி ஆயோக் அமைப்பின் முதல்கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் நிதிமந்திரி அருண் ஜெட்லி, நிதித் துறை ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்கா, திட்டத்துறை ராஜாங்க மந்திரி இந்தர்ஜித் ராவ், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் அதன் முழு நேர உறுப்பினர்களான பிபேக் தெப்ராய், வி.கே.சரஸ்வத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்திய தொழில் மற்றும் வணிககூட்டமைப்பின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ராஜீவ் குமார், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல்ஜலான், ரிசர்வ்வங்கி முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகரண் மற்றும் விவசாய பொருட்களின் விலை நிர்ணய குழுமத்தின் முன்னாள் தலைவர் அசோக்குலாட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் குறிப்பாக வேளாண்மை துறை சார்ந்த பொருளாதார முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் மற்றும் விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட இருக்கும் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வருகிற 23–ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 28–ந் தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களின் யோசனைகளை பிரதமர் கேட்டு அறிந்தார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகளவில் தற்போது நமக்கு சாதகமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ் நிலையை பயன்படுத்தி அபிவிருத்திக்கு வழி வகுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொருளாதார நிபுணர்கள், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வெற்றியுடன் செயல்படுத்துவது குறித்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டம் முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த நிதி மந்திரி அருண்ஜெட்லி, அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது, சமூக அபிவிருத்தி திட்டங்கள், முதலீடுகளை ஈர்ப்பது, சேமிப்பை ஊக்கப் படுத்துவது போன்ற பட்ஜெட் தொடர்பான யோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டதாக கூறினார். வேளாண்மைதுறை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதிஆயோக் அமைப்புக்கு அரசியல் சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, அதுபற்றி இப்போது கூறமுடியாது என்று அருண் ஜெட்லி பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.