இந்திய இளைஞர்கள் திறமையான வர்கள். இந்தியாவில் முதலீடுசெய்து அவர்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.

பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், மேலும் அதிகளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள பிரதமர் மோதி, நாட்டில் உள்ள திறன் வாய்ந்த இளைஞர்களைப் பயன்படுத்தி கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவை அடுத்த சக்கான் பகுதியில் அமெரிக்காவை சேர்ந்த ஜி.இ. நிறுவனம் அமைத்துள்ள தொழிற் சாலையை அவர் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.

"பிரில்லியன்ட் ஃபேக்டரி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் முதல் கட்டமாக, எரிசக்தித் துறை, எண்ணெய்-எரிவாயு, போக்கு வரத்து ஆகிய துறைகளுக்கான சாதனங்கள் தயாரிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக, அதி நவீன விமான என்ஜின் உதிரிபாகங்கள், நவீன ரயில்பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும். நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 1,500 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ள இந்த தொழிற்சாலையை தொடக்கிவைத்து மோடி பேசியதாவது:

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்கவிரும்பும் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக இந்த அழைப்பை விடுக்கிறேன். உங்கள் (முதலீட்டாளர்கள்) வளர்ச்சி என்பது எங்கள் வளர்ச்சி யுடன் தொடர்புடையதாக இருக்கும்.

போட்டி நிறைந்த இந்தஉலகில், இந்தியாவில் மிகச்சிறந்த திறன்வாய்ந்த மனித ஆற்றல் அதிக அளவில் இருக்கிறது என்பதை உலகம்முழுவதும் உள்ள பெரு நிறுவனங்களுக்கு உறுதிபட கூற விரும்புகிறேன்.

இந்த ஆற்றலானது, மற்ற நாட்டு சந்தைகளுடன் போட்டியிடக்கூடிய பொருள்களை தயாரிக்க அவர்களுக்கு உதவும்.

இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதைவிட குறைந்தவர்களாவர். நமது திறமையான இளைஞர்களால் உலகம் முழுவதிலும் இருந்து முதலீடுகளை ஈர்க்கமுடியும்.

முன்பு, ஹோட்டல்கள், சுற்றுலாவிடுதிகள் போன்றவற்றை தொடங்குவதற்கு அரசிடம் இருந்து 110 அனுமதிகளை பெற வேண்டியிருந்தது. அதை தற்போது 20 அனுமதிகளாக குறைத்துள்ளோம்.

தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றை எளிதாக்கு வதற்கு எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாட்டில் தொழில்செய்வதை எளிதாக்க எனது அரசு மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்தியப் பொருளாதாரமானது உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரமாகும். இங்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 7.4 சதவீதமாக உள்ளது. அதை நீடித்திருக்கச் செய்யவும் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டியுள்ளது. அதற்காக உற்பத்தி, விவசாயம், சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவில் உற்பத்தித்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் முதலீடுசெய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்காக தொழில் நடைமுறைகளை எளிதாக்குவதில் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான அரசும் கவனம்செலுத்தி வருகிறது.

கப்பல்கட்டும் துறையில் இந்தியா ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை அளிக்கிறது. இங்கு கப்பல்களை கட்ட முன்வருமாறு ஜி.இ. நிறுவனத்தை அழைக்கிறேன்.

இந்தியாவில் பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுவரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இத்துறையில் ஜி.இ. நிறுவனமும் உலகின் மற்ற நிறுவனங்களும் முதலீடுசெய்ய வேண்டும். இந்தியாவில் ரயில்வே துறை வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

கடந்த சிலமாதங்களில் மத்திய அரசு பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. இவை உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன. 21ம் நூற்றாண்டு என்பது ஆசியாவுக்கானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அதில் இந்தியா முக்கிய பங்காற்றும். நல்லாட்சி என்பது வளர்ச்சிக்கான உத்தரவாதமாகும். எனது அரசு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரங்களில் தொழில்தொடங்குவதை எளிமையாக்குவதும் ஒன்றாகும் என்றார் பிரதமர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.