நாட்டுமக்கள் அனைவரது வீடுகளுக்கும் மலிவுவிலையில் மின்சாரம் வழங்கும் வகையில், மரபுசாரா மின் உற்பத்தி தொடர்பாக புதிய கண்டு பிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்.

மரபுசாரா எரிசக்தி உலக முதலீட்டாளர்களுக்கான முதலாவது மாநாட்டை தில்லியில் ஞாயிற்றுக் கிழமை தொடக்கிவைத்து, அவர் பேசியதாவது:

இந்தியாவில் அனல் மின்நிலையம், நீர்மின் நிலையம், அணு சக்தி ஆகியவை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போதோ சூரிய ஒளி, காற்றாலைகள், இயற்கை எரிவாயு ஆகிய மரபுசாரா முறைகள் மூலமும் மின்சாரம் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

வளர்ச்சிப் பணியை விரைவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம். வளர்ச்சியின் புதிய உச்சங்களை சென்றடைய விரும்புகிறோம். அதில், மின்சாரமும் ஒருதுறை ஆகும்.

குஜராத் முதல்வராக நான் பதவிவகித்த காலத்தில், நீர்வழி தடங்களில் சூரிய ஒளிமின் தயாரிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டன. அவற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நீர் ஆவியாதலும் 40 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

சூரிய ஒளியில் இருந்து உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை, விவசாய பணிக்காக, நீர்ப்பாசன பம்புகளை இயக்குவதற்கு பயன் படுத்தலாம். நுண்ணீர் பாசனத்தின் மூலம், விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

வசதி படைத்தவர்களுக்காக மரபுசாரா மின் உற்பத்தியில் நாங்கள் கவனம் செலுத்த வில்லை. ஏழைகளின் வீடுகளில் ஒளியேற்ற வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் தான், மரபுசாரா மின் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்திவருகிறோம். வளர்ச்சியின் பயன்கள், நாட்டில் உள்ள கடை நிலை குடிமகனின் வீட்டுக்கு கிடைக்காதவரை சாமானிய மக்களுக்கு அதன் பயன்கள் போய்ச்சேராது.

இந்தியாவில் குளங்கள் உள்ளன. அந்தக்குளங்கள் மீது, சூரிய ஒளி மின் சாதனத்தை அமைப்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக நமக்கு புதுமையான யோசனைகள் தேவைப்படுகின்றன.

மின்சாரத்தை தயாரிப்பதற்கான செலவு, ஒருயூனிட்டுக்கு ரூ.20-லிருந்து ரூ.7.50 ஆகக் குறைந்துள்ளது. இந்தச்செலவு தொகையை புதியகண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மூலம் மேலும்குறைக்க முடியும். சூரிய ஒளி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டு மின்சாரம் உற்பத்திசெய்வது ஊக்குவிக்கப்படும்.

இதனால், மின்சாரப் பரிமாற்றத்துக்கு ஆகும் செலவையும், மின்சாரத்தை கொண்டுசெல்லும் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவையும் குறைக்க முடியும்.

உள்நாட்டில் மரபுசாரா மின் உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக அந்தத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதிக அளவில் மின்சாரத்தை சேமித்தால், நமது எதிர்கால சந்ததியினருக்கும் அது பேருதவியாக இருக்கும் என்றார் மோடி.

மாநாட்டில், அடுத்த 5 ஆண்டுகளில் 2.66 லட்சம் கோடி வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய உறுதி பூண்டிருப்பதாக 293 நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், இந்தியாவில் மரபுசாரா மின்உற்பத்தி நிலையங்களை அமைக்கவும், மரபுசாரா மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கும் மையங்களை அமைக்கவும் அந்தநிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.