பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கைக்கு வருவதாக இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனாரத்ன அறிவித்திருக்கிறார். தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு மார்ச் 15ம் தேதி இந்தியா திரும்புவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக செல்லவிருக்கிறார். 1987ம் ஆண்டு அப்போதைய இந்தியபிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அரசு முறைப்பயணமாக சென்று அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த பயணத்தின் இறுதியில் அவர் இலங்கை ராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் அப்போது மிகுந்தபரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்குப்பிறகு, இந்தியப்பிரதமர் ஒருவர் இலங்கைக்கு மட்டுமான அரசுமுறை பயணமாக செல்வது இதுவே முதல் முறை. ராஜீவ் காந்திக்குப் பிறகான காலகட்டத்தில் இந்திய பிரதமர்கள் சிலர் இலங்கைக்கு சென்றிருந்தாலும் இலங்கைக்கான தனிப்பட்ட அரசு முறைப்பயணமாக அவை அமைந்திருக்க வில்லை. மாறாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன.

2008ம் ஆண்டு அப்போதைய இந்தியபிரதமர் மன்மோகன்சிங் கொழும்பில் நடந்த சார்க்மாநாட்டில் கலந்து கொண்டு சார்க் அமைப்பின் தலைமைபொறுப்பை அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கு கிடைக்கச் செய்தார் . அதேசமயம், 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தவாரம் இந்தியா வந்திருந்தார். இந்தியா இலங்கை இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்திடப்பட்டன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வரும்படி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக இந்திய தரப்பிலும் அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் மோடியின் இலங்கை பயண தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.