சென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 'ஸ்மார்ட்' நகரங்கள் கட்டப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி, டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்ட்லா, சென்னை, மும்பை, கொச்சி, எண்ணூர், தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 முக்கிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த துறை முகங்களில் 2.64 லட்சம் ஏக்கர் நிலம் கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது. மும்பை துறை முகத்தில் மட்டும் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான 753 ஹெக்டேர் நிலம் உள்ளது. இவை கப்பல்துறையின் முக்கியமான செல்வமாகும். இந்த நிலத்தை யாருக்கும் விற்பனை செய்ய நாங்கள் விரும்பவில்லை.

எனவே இந்தபகுதிகளில் 'ஸ்மார்ட்' நகரங்கள் அமைக்க நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். அதன்படி ஒவ்வொரு துறை முகத்திலும் தலா ஒன்று என்ற அடிப்படையில், 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான இடங்களை செயற்கைக் கோள் மூலம் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இதற்கான பணிகள் இன்னும் 4 அல்லது 6 மாதங்களில் தொடங்கி, 5 ஆண்டுகளில் அனைத்துபணிகளும் நிறைவுபெறும். ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடி செலவிடப்படும். அந்த வகையில் 12 சிட்டிகளுக்கும் ரூ.50 ஆயிரம்கோடி செலவிடப்படும்.

சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் இந்தநகரங்கள், பசுமை நகரங்களாக இருக்கும். இங்கு அகன்றசாலை வசதியுடன், நவீன குடியிருப்புகள் கட்டப்படும். மேலும் பள்ளிகள், வணிகவளாகங்கள் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். இங்கு கப்பல்கட்டும் தளம் மற்றும் கப்பல் உடைக்கும் தளம் ஆகியவற்றுடன் பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்படும். துறைமுகமும், ஸ்மார்ட் நகரமும் மின் ஆளுமை திட்டத்தில் இணைக்கபடும்.

துறை முகங்களில் இருந்து வெளியேறும் நீர் மறு சுழற்சி செய்யப்படுவதுடன், இங்கிருந்து வெளியேறும் கழிவுபொருட்கள், இயற்கை எரிவாயுவாக மாற்றப்படும். மேலும் துறைமுகங்களில் சூரிய ஒளி மின் சக்தி திட்டங்கள் நிறுவப்படும். அத்துடன் இயற்கை எரிபொருள் உலைகளும் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த நகரங்களில் ஓடும்வாகனங்கள் இயற்கை எரிபொருள் மூலம் இயக்கப்படும். மேலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.