காஷ்மீரில் ஸ்ரீநகரில் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஹூரியத் மாநாடு பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அப்துல் கனி லோனின். இளைய மகன் சஜத் கனி லோன் அமைச்சராகியுள்ளார்.

இவர் தனது மற்றொரு சகோதரரான பிலால் கனி லோனிடம் இருந்துபிரிந்து வந்து 2004-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தனது தந்தையின் மக்கள் மாநாடு கட்சியின் தனி அணியை உருவாக்கி நடத்திவந்தார். பிரிவினைவாதிகள் தங்கள் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும், அப்போது தான் நமது குரல் மத்திய அரசால் கேட்கப்படும்' என வலியுறுத்தினார். அத்துடன் பிரிவினைவாத கொள்கையை கைவிட்டார். தொடர்ந்து 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

காஷ்மீர்மக்கள் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எடுத்துவைப்பேன் என்று கூறினார். ஆனாலும் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து தனது கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்தான் போட்டியிடாமல், தனது கட்சி சார்பில் வடக்கு காஷ்மீரில் ஒருவரை நிறுத்தினார்.

அவரும் தோல்வி கண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சஜத்கனி லோன், ஹந்த்வாரா தொகுதியில் போட்டியிட்டு, தேசிய மாநாட்டு கட்சி மந்திரி சவுத்ரி முகமது ரம்ஜானை வீழ்த்தி, வெற்றி பெற்றார். அத்துடன் இவரது கட்சி வேட்பாளர் குப்வாரா தொகுதியிலும் வெற்றிபெற்றார்.

தேர்தலுக்கு பின்னர், மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி அரசு அமைய ஆதரவுதெரிவித்தார். இப்போது முப்தி முகமது சயீத்தின் மந்திரி சபையிலும், பாரதீய ஜனதாவின் மந்திரிகள் ஒதுக்கீட்டில் இடம்பிடித்து சஜத் கனி லோன் மந்திரி ஆகியுள்ளார்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியபோதே, சஜத்கனி லோன் பாரதீய ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் என்ற யூகங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.