ஜெய்ஷ் –இ -முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு சவுதிஅரேபியா தடையாக இருக்காது என்று அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சர் அடெல் பின் அகமது அல்-ஜுபெய்ர் தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அடெல் பின் அகமது அல்-ஜுபெய்ர் பயங்கர வாதத்தை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஐநா தடைவிதிக்க வேண்டும் என்று கூறினார். பேட்டியில் அமைச்சர் அடெல் பின் அகமது அல்-ஜுபெய்ர் பேசியதன் விவரம் :

சவுதி அரேபியா பயங்கர வாதத்திற்கு எதிரான கொள்கையை பின்பற்றி வருகிறது. பயங்கர வாதிகளும் அவர்களுக்கு ஆதரவாக செயல் படுபவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்க கூடாது என்று பாகிஸ்தான் – சவுதி அரேபியா வெளியிட்ட கூட்டு அறிக்கை, மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை குறிப்பிடுவதாக பலர் தவறாக கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

மசூத் அசாரை சர்வதேச பயங்கர வாதியாக ஐநா அறிவிப்பதற்கு சவுதி அரேபியா ஒருபோதும் தடையாக இருக்காது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை மேலும் அதிகரிக்காது என நம்புகிறோம். இரு நாடுகளிலும் அறிவுத்திறன் கொண்ட மரியாதைக் குரிய பிரதமர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வுகாண்பார்கள் என நம்புகிறேன் என அமைச்சர் அடெல் பின் அகமது அல்-ஜுபெய்ர் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க சவுதி அரேபியா அரசு உதவிசெய்யுமா ? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அடெல்பின் அகமது அல்-ஜுபெய்ர் ‘‘இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் நாங்கள் தலையிட மாட்டோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது’’

‘‘ஒருவேளை இரு நாடுகளும் இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவின் உதவியை நாடினால் அதைபற்றி நாங்கள் பரிசீலிப்போம். அணுசக்தி நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்மூள்வதை யாரும் விரும்பவில்லை’’ என்று அமைச்சர் அடெல்பின் அகமது அல்-ஜுபெய்ர் தெரிவித்தார்.

Comments are closed.