முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் ஓட்டுவங்கி அரசியலை தவிர்த்து எதிர்க் கட்சிகளுக்கு உண்மையான அக்கறை கிடையாது என்று சட்ட சபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.

மராட்டியத்தில் முந்தைய காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி அரசின் கடைசிகட்டத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் காலாவதி முடிந்ததால், அந்த சட்டத்தை ரத்துசெய்ததாக கடந்த வாரம் பா.ஜ.க, சிவனோ கூட்டணி அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

நேற்று நடந்த சட்ட சபை கூட்டத்தில் இந்த பிரச்சினையை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பூதாகரமாக எழுப்பினர். எதிர்க் கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் (காங்கிரஸ்) பேசுகையில், முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க ஐகோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே அரசு இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றவேண்டும்'' என்றார்.

இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து பேசியதாவது:–

முஸ்லிம் இடஒதுக்கீடு வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இறுதிதீர்ப்பு இன்னும் கூறப்படவில்லை. இந்த பிரச்சினையில் அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் அரசு நடந்துகொள்ளும். ஓட்டுவங்கி அரசியலுக்காக இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் தூக்கியுள்ளன. முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பான உண்மையான அக்கறை எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

வக்பு வாரிய நிலம் சட்ட விரோதமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள்தான் அப்போது ஆட்சியில் இருந்தனர். அப்போது அரசு என்னசெய்தது என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையில் அரசு சட்ட ஆலோசனை கேட்டுவருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே சட்ட ஆலோசனைபெற்று உரிய நடவடிக்கை எடுப்போம். கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில், முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்கனவே 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.