நில எடுப்பு திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்து இருப்பதை வரவேற்கிறோம், என்று குற்றாலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு வந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாராளுமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மக்கள் பாராட்டுகிறார்கள். இதில் சிறப்பம்சமாக காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒருவர் ஒரு மாதத்திற்கு ரூ.1 வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தினால் விபத்து நஷ்டஈடு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. ரூ.330–க்கு ஆயுள் காப்பீடு பெறலாம். அமைப்பு சாரா கூலி தொழிலாளர்களுக்கு ரூ.1000 பென்சன் வழங்கப்படுகிறது.

பா.ஜனதா அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது என்று கூறுவது தவறு. ரூ.1 கோடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 2 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.9 ஆயிரத்து 800 கோடி அரசுக்கு கிடைத்துள்ளது. ராஜ்ய சபாவை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்படுகின்றன.

நாடு முழுவதும் 400 நீர் மற்றும் மின்திட்டங்கள் நில பிரச்சினையால் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. நில எடுப்பு திட்டம் மூலம் தான் இதனை செயல்படுத்த முடியும். இந்த திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு 10 மில்லியன் டாலர் வழங்கி உள்ளது. இதன்மூலம் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 21 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.

திருமணம் ஆகும் போது தாலி கட்டுவது, தமிழர்களின் கலாசாரம். பல மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு இது இல்லை என்பதற்காக நாம் விட்டுவிட முடியாது. விவாதம் என்ற பெயரில் இந்துக்களை இழிவுபடுத்துவதை நாம் ஏற்று கொள்ள முடியாது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு பூத்திற்கும் 100 வாக்காளர்கள் வீதம் பாரதீய ஜனதாவில் மார்ச் மாத இறுதிக்குள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தான் இங்கு வந்துள்ளோம். தமிழகத்தில் ஒ.பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சியில் வேகம் இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முதல்–அமைச்சர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். யார் வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியே போகலாம். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி மசூதிகள் குறித்து கூறியது அவரது சொந்த கருத்து. அது பா.ஜ.க கருத்தல்ல. மத்திய அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக உள்ளது என்பது கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியினரும் கிளப்பிவிட்ட வீண் வதந்தியாகும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.