பயங்கர வாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தானும், ஐஎஸ்ஐ. உளவு அமைப்பும் நிறுத்தினால் தெற்காசியாவின் பாதுகாப்பு மேம்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு கருத்தரங்கம்- 2015, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் நடைபெறுகிறது. கருத்தரங்கை துவக்கிவைத்து பேசிய ராஜ்நாத் சிங், "பயங்கர வாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தானும், ஐஎஸ்ஐ. உளவு அமைப்பும் நிறுத்தினால் தெற்காசியாவின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவு மேம்படும். பயங்கர வாதிகள் நல்லவர், கெட்டவர் இல்லை. எனவே, பயங்கர வாதிகளை தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியமண்ணில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்" .

"உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் பயங்கரவாத கொள்கைகளை விஷமிகள் ஆன்லைனில் பரப்புவதும் எளிதாகி விட்டது. உலகில் எங்கோ ஒருமூலையில் இருந்துகொண்டு 'லோன் உல்ஃப்' 'டூ இட் யுவர்செல்ஃப்' போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெறுப்பு பிரச்சாரத்தை எளிதாக பரப்புகின்றனர். இதனால், அப்பாவிமக்கள் சிலர் மூளை சலவை செய்யப்படுகின்றனர். ஐஎஸ்ஐஎஸ். பயங்கரவாத இயக்கம் உலகம் முழுவதும் இவ்வாறாக பலரை மூளைச்சலவை செய்துள்ளது.

ஆனால், இந்தியாவில் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. ஏனெனில் இந்திய முஸ்லிம்கள் தேசப் பற்று மிகுந்தவர்கள். அவர்களை அடிப்படை வாதிகளின் கொள்கைகள் அசைக்க முடியாது" என ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.