ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிலிருந்து பா.ஜ.க.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கேசவ விநாயகம் மீது தமிழக அரசியல் கட்சிகளின் பார்வை அழுத்தமாகப் படிந்திருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக பா.ஜ.க.வின் கூட்டணி வியூகங்களில் இவர் முக்கியப் பங்கு வகிப்பார் என்கிறார்கள்.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவின் அதிதீவிர கண்காணிப்பில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது நிர்வாகிகள் மாற்றம் ஆகிய விஷயங்களில் அமித்ஷா கவனம் செலுத்தி வருகிறார்.

அதில் ஒரு அம்சமாக, ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் தென் தமிழக அமைப்பாளராக பதவி வகித்த கேசவ விநாயகம் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பா.ஜ.க.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். மார்ச் 15-ம் தேதி நாக்பூரில் கூடிய ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரங்களுக்குள் இப்படி நிர்வாகிகளை பரிமாறிக்கொள்வது சகஜமான நடைமுறைதான். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் விருப்பத் தேர்வாக கேசவ வினாயகம் அழைக்கப்பட்டிருக்கிறார். ஐம்பத்தைந்து வயதான கேசவ விநாயகம், திருமணம் செய்துகொள்ளாத பிரம்மச்சாரி!

கேசவ விநாயகத்தின் தேர்வு குறித்து, பா.ஜ.க. சீனியர்களிடம் பேசியபோது, கன்னியாக்குமரி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் கேசவ விநாயகம் 2004-ம் ஆண்டு இவர் பா.ஜ.க.வின் சார்பு தொண்டு நிறுவனமான சேவாபாரதியில் தமிழக அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். அப்போதுதான் தமிழகத்தையே உலுக்கிய சுனாமிப் பேரழிவு நிகழ்ந்தது.

அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் கேசவ விநாயகம் தலைமையில் சேவாபாரதி உறுப்பினர்கள் ஆற்றிய பணி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கேசவ விநாயகமே களத்தில் இறங்கி சுனாமியில் இறந்தவர்களின் உடல்களை மீட்டார். தொடர்ந்து அப்போது மோடி தலைமையில் செயல்பட்ட குஜராத் அரசின் நிதி உதவியுடன் மீனவர்ககளுக்கு நிவாரண பணிகளையும் செய்தனர்.

இந்தப் பணிகள் அப்போதே ஆர்.எஸ்.எஸ். தலைமையையும் மோடியையும் வெகுவாக கவர்ந்தன. அதன்பிறகே, அவர் ஆர்.எஸ்.எஸ்.சில் தென்தமிழக அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்போது தமிழக பா.ஜ.கவில் முக்கியப் பொறுப்பை பெற்று இருக்கிறார்.
பா.ஜ.க.வில் மாநில அமைப்புச் செயலாளரை பொறுத்தவரை, அவர் பொது மேடைகளில் தோன்ற மாட்டார். பேட்டி கொடுக்க மாட்டார். மாநிலம் முழுக்க கட்சி அமைப்புகளை வலுபடுத்துவதர்காக திட்டமிடல், அவரது பொறுப்பில் விடப்படும்.

கட்சியின் நலன் கருதி யாருடன் கூட்டணி சேரலாம்? வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்க வேண்டும்? எத்தனை இடங்களில் போட்டியிடுவது? உள்ளிட்ட விஷயங்களை முடிவெடுப்பதில் அவர் முக்கியப் பங்கு வகிப்பார். கட்சியின் தேசியத் தலைமை அவருடன் நேரடி தொடர்பில் இருக்கும்" என்றார்கள் அவர்கள்.

கேசவ வினாகத்தின் மூத்த சகோதரி சுஜாதா, கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வசிக்கிறார். அவரிடம் பேசியபோது "எங்க அப்பா நேர்மையான வில்லேஜ் ஆபீசரா இருந்தாரு. எங்க சொந்த ஊர் தக்கலை பக்கத்துல உள்ள மணலிக்கரை.

1967-ல் கல்யாணமாகி நான் அருமனைக்கு வந்துட்டேன். கேசவ விநாயகம் எட்டாம் வகுப்பு படிக்கிறப்பவே, அருமனையில் உள்ள என் வீட்டுக்கு வந்துட்டான். பழைய பதினொன்னாம் வகுப்பு படிச்சுட்டு, ஐ.டி.ஐ. படிக்கக் போனான். அதை பாதில விட்டுட்டான். அப்பதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துல அவனுக்கு ஈடிபாடு வந்துச்சு.

இங்கே பல இடங்கள்ல ஷாஹா (தினசரி சந்திப்பு) நடந்துச்சு. அதுக்கு போய் பயிற்சி கொடுப்பான். முதல்ல திருச்செந்தூருல பிரசாரகராக் (முழுநேர ஊழியர்) பணியாற்ற போனான்.
இங்கே இருக்கிறப்பவே, தேச சேவை செய்யப்போறேன். அதனால என்னை கல்யாணம் பண்ணச்சொல்லி வற்புறுத்தக் கூடாது-ம்பான் அதுமாதிரியேதான் இருந்தான். நாகையில் சுனாமியில செத்துப்போனவங்களை பிணமா தூக்கி எடுத்து அடக்கம் பண்ணினதை அழுதுகிட்டே அவன் போன்ல சொன்னது இன்னிக்கும் மனசுல இருக்கு. அந்த மீட்பு பணிகள் முடிஞ்சதும், சிக்கன் பாக்ஸ் வந்து சிரமப்பட்டான்.

ரயில்ல ஒரு தடவை அவன்கூட டெல்லிக்கு போனோம். அப்போ காலையில் ரயிலில் தூங்கி எழுந்ததும் அந்த கம்பார்ட்மென்ட் முழுவதையும் துடைத்து சுத்தம் செய்தான். அப்பத்தான்.புரிஞ்சது, சுயம் சேவகர்ன்னா சும்மா இல்லைன்னு!
சமீபத்துல அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எங்க ஊருக்கு வந்து தங்கியிருந்து, அவன்கூட கன்னியாகுமரிக்கு புறப்பட்டுப் போனார். தலைவர்கள் கூட பணிவா, இணக்கமா அவன் இருக்கிறதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன்" என்றார் அவர்.

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் அருமனையில் அவரோடு பணியாற்றிய பேராசிரியர் சுபாஷ் குமார் கூறுகையில், விநாயகத்தை பொறுத்தவரை, ஆர்.எஸ்.எஸ்.சில் மிதவாதி. அப்போதே ஷாஹா தவிர, மாலை நேரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷ்ன்களும் எடுத்து வந்தோம். பாரதிய ஜனதா ஒரு நல்ல தலைவரை அடையாளம் கண்டிருக்கிறது" என்றார் அவர்.

பி.எட்.கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வரும் எழுத்தாளருமான கமல செல்வராஜ் நம்மிடம், "வசதியான குடும்பத்துல பிறந்தாலும் அதை அவர் காட்டிக்கவே மாட்டார். முன்னாடி எல்லாம் உயர் சமுதாயத்துல உள்ளவங்க, பிற சமூகத்துல உள்ளவங்ககூட இணக்கமா இருக்க மாட்டாங்க. ஆனா , அப்பவே தலித் மக்கள்கிட்டேகூட விநாயகம் அன்பா இருப்பாரு. அவங்க வீட்டு நிகழ்ச்சிகள்ல கலந்துக்குவாரு. இன்றைய சமூக சூழலுக்கு, தலைமை தாங்கும் தகுதியுள்ள நபர் அவர்" என்றார்.

சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பா.ஜ.க.வின் வியூகங்களில், விநாயகத்தின் தேர்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது!

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்……..

Tags:

Leave a Reply