மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதமரின் விபத்துக்காப்பீடு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடுதிட்டம், முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பெயரிலான அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி, வரும் 9-ம் தேதி கொல்கத்தாவில் தொடக்கி வைக்கிறார்.

பொது மக்களுக்கு ஆயுள், விபத்து காப்பீடு திட்டங்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமும் செயல் படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்ததிட்டங்கள் தொடர்பாக நிதி அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விபத்துக் காப்பீடு: வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுக்குள்பட்ட அனைவரும் விபத்துக்காப்பீடுத் திட்டத்தில் இணையலாம்.

ஓராண்டு புதுப்பிக்கத்தக்க இத்திட்டத்தில், பாலிசி தாரர்களிடமிருந்து காப்பீட்டு கட்டணமாக (பிரிமீயம்) ஆண்டுக்கு ரூ.12 வசூலிக்கப்படும்.

பாலிசிதாரர்கள் விபத்தில் இறந்தாலோ, அவர்களுக்கு ஊனம் ஏற்பட்டாலோ, விபத்துகாப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது இதர பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் நிர்வகிக்கப்படும்., ஆயுள் காப்பீடு: வங்கியில் சேமிப்புகணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுக்குள்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

ஓராண்டு புதுப்பிக்கத்தக்க இத்திட்டத்தில் பாலிசி தாரர்களிடமிருந்து, ஆண்டுக்கு ரூ.330 காப்பீட்டுக் கட்டணம் பெறப்படும். எந்தவொரு காரணத்தாலும் பாலிசிதாரர் இறக்கநேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படும். ஆயுள்காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) அல்லது விருப்பமுள்ள பிற ஆயுள்காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஓய்வூதியத் திட்டம்: வருமான வரி செலுத்தாவர்கள், இதர ஓய்வூதிய திட்டங்களில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் ஆகியோர் இந்தத்திட்டத்தில் இணையலாம்.

அமைப்பு சாரா தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்ததிட்டத்தில், வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள் சேரலாம்.

அவர்கள் 20 ஆண்டுகளோ அல்லது அதற்குமேலோ செலுத்தும் சந்தா தொகையின் அடிப்படையில், அவர்களது 60-ஆவது வயதிலிருந்து ரூ.1,000 முதல் ரூ. 5,000 வரை, குறைந்த பட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.

நிகழ் ஆண்டில், டிசம்பர் 31-ம் தேதிக்குமுன்பு இந்தத்திட்டத்தில் இணைபவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான சந்தாதொகையில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு தலா ரூ.1,000 இவற்றில் எதுகுறைவோ, அந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.