“இங்கிருப்பதெல்லாம் இறை அம்சங்களே” என்கிறது வேதம். இருப்பதெல்லாம் இறை அம்சமே என்றால் இறைவன் இங்கேதானே இருக்க வேண்டும்? இறைவன் அனைத்திலும் வியாபித்து இங்கேயே இருக்கிறான். வேறு எங்கும் தேட அவசியமில்லை என்ற ஒப்பிலா தத்துவம் ஹிந்து தர்மம்.

“அனைத்து மதங்களும் ஒன்றே என்றும் அவை ஒரே இடத்துக்கு இட்டுச் செல்கின்றன என்றும் பேசி உயர்நிலைகளில் இருப்போர் மக்களை குழப்புகின்றனர். இந்திய மக்கள் தங்களுக்கென்று உள்ள கலாச்சாரத்தினால் ஈசன் என்ற தத்துவத்தை உள்வாங்கி எந்த மொழியிலும், எந்த உருவத்திலும் இறைவனை வழிபடுவதால் தவறில்லை என நம்புகின்றனர். இப்படி அவர்கள் ஏற்பதாலேயே அனைத்து மதங்களும் இறைவனிடம் கொண்டு சேர்க்கும் என்று பொருளல்ல. ஆயினும் இன்றைய ஹிந்துக்கள் இந்த தத்துவார்த்த உள்வாங்குதல் இல்லாமல் தங்கள் மதம், கலாச்சாரம் இவை பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள்.”

எந்த கலாச்சாரத்தையும் அல்லது மதத்தையும் அழிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை நான் அனைவரிடமும் சொல்லி வருகிறேன். ஆனால் அதிரடி மதங்களின் தலைவர்கள் எந்த உருப்படியான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபாடு காட்டுவதில்லை. எனவே நான் என் மக்களிடமே பேச வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மற்ற மதங்களின் கொள்கைகள், கோட்பாடுகள், இவற்றை அறிந்துகொள்ளுங்கள், கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார் என்ற தத்துவத்தை அவை எதிர்ப்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று என் மக்களிடம் நான் எடுத்துச் சொல்கிறேன். மதசார்பின்மை பற்றி நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தெரிவிக்கும் தவறான வாதங்களில் ஹிந்துக்கள் பலர் மயங்கி இருக்கிறார்கள். மதமாற்றத்தை தடை செய்வது பிற மதங்களை சார்ந்தவர்களை புண்படுத்தும் செயல் என்று நினைக்கிறார்கள். காஞ்சி மகாப்பெரியவர் சொன்னதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்: “ஹிம்சையை எதிர்ப்பதே அஹிம்சை” என்றார் அவர்.

சமானியரோ, என் போன்ற துறவியோ சுற்றிலும் நடப்பவற்றை ஒதுக்கிவிட முடியாது. யாராக இருப்பினும் சரியான கண்ணோட்டத்தில் நிகழ்வுகளை கவனித்து புரிந்து கொள்வது அவசியம். இன்றைய நிலையில் ஹிந்துமதம் காக்கப்பட வேண்டும்.

மதமாற்றம் என்பது வன்செயல் என்பதை மக்களுக்கு புரியவைக்கும் பணி. மதவெறி அல்ல. இன்னொரு மதம் இருக்கக்கூடாது என்பதுவும் அந்த மதத்தை சார்ந்தவனுக்கு மோட்சமில்லை என்பதுவும் அவன் உயிரோடு கூட இருக்க அருகதையில்லாதவன் என்பதுவும் தான் மதவெறி. ஆனால் பலரும் இப்படி வன்முறை வாதங்கள் செய்பவர்களை மதவெறியர் என்று சொல்லாது அமைதியாக வாழ்பவர்களை அப்படிச் சொல்வதன் காரணம் புரியவில்லை. இது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடும். இன்றைய நிலையில் ஹிந்துதர்மம் நிலைக்க அதற்கு பாதுகாப்பு தேவையாக இருக்கிறது. அதற்காக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியமாகிவிட்டது.

பிராணிகளை கவனிக்கும்போது ஒன்று தெரியும் அசைவ பிராணிகள் எப்போதும் சைவப் பிரானிகளையே கொன்று தின்கின்றன. அவை மேயும் இடங்களினருகே காத்திருந்து சரியான நேரத்தில் தாக்குகின்றன. ஆனால் சைவப் பிராணிகளோ இரண்டு வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. முதலில் மேய்ச்சலுக்கு சரியான உணவும் நீரும் கிடைக்கும் இடத்தை தேர்ந்து எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. அதே நேரம் தாங்கள் தாக்கப்படாமல் பாதுகாப்பிலும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதே போல ஹிந்துவாக இருப்பவன் தன் தர்மத்தையும் கலாச்சாரத்த்தையும் அழித்துவிடாமல் காப்பாற்றி அவற்றை தன சந்ததியருக்காக விட்டுச்செல்லவும் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.