பல்வேறு துறைகளில் பொதுமக்கள் அனுப்பிய 93 ஆயிரம் புகார்களுக்கு, ஒருமாத காலத்துக்குள் தீர்வு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 1 லட்சத்து, 903 புகார்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில், 93,379 அதாவது, 93 சதவீத மனுக்கள் ஒரு மாதத்துக்குள் தீர்த்துவைக்கப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக புகார்மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அரசிடம் வழங்கும் மனுக்களால் தீர்வுகிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையையே இதுகாட்டுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டில், 2,70,255 மனுக்கள் பெறப்பட்டன. இதுவே கடந்தாண்டு 8,81,132 மனுக்களாக அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டில், 1,76,126 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.

தற்போது செயல்படுத்தப்படும் புதிய நடைமுறைகளின்படி, புகார்களின் உண்மைத் தன்மையை சோதிக்க, விளக்கங்கள் பெற, களநிலவரத்தை தெரிந்துகொள்ள உடனுக்குடன் தொலைபேசி மூலமாகவே தொடர்பு கொண்டு விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply