நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மக்களவையில் புதன் கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மூலம் நாடுமுழுதும் ஒரே மறைமுக வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. இதற்காக நிபுணர்கள்குழு பரிந்துரை செய்த 27% வரி விதிப்பைக்கூட தளர்த்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

மேலும், மாநிலங்களின் வருவாய்க்கு எந்தவித பங்கமும் இந்த மசோதாவினால் ஏற்படாது என்றும் அப்படிவருவாய் இழப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதன் இழப்பை ஏற்கும் என்றும் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

இந்தமசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 2016 முதல் நடை முறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தினால் மாநில அரசுகள் வசூலிக்கும் சுங்கவரி, சேவைவரி, மாநில வாட்வரி, நுழைவு வரி, ஆக்ட்ராய் மற்றும் பிறவரிகள் சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரேகுடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த அருண்ஜேட்லி, "மசோதா என்பது நடனமாடும் ஒருஉபகரணம் கிடையாது, நிலைக் குழுவிலிருந்து நிலைக்குழு என்று அதனை தாவச் செய்து கொண்டே இருக்க முடியாது" என்றார்.

மேலும், "நிபுணர்கள் குழு பரிந்துரைசெய்த 27% வரி மிகவும் அதிகம், நிச்சயம் இது குறைக்கப்படும். நாடுமுழுதும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கும்போது பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும், வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்" என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.