அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் விடுதலை குறித்து ஊடகங்களில் வரும்செய்திகள் உண்மையாக இருக்குமானால், நீதிமன்றமே இப்போது கேள்விக் குறியாகிவிடும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தஞ்சையில் அளித்த பேட்டியில் கூறியதாவது; சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதில் பாஜக.,வுக்கு தொடர்பு உள்ளதாக நினைத்து, நாட்டின் நீதித் துறையை குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு முன்பு தண்டனை வழங்கிய போதும் மோடிதான் பிரதமராக இருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம்.

ஆனால், தற்போது பிரச்சினை வேறாக இருக்கிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து, நீதிமன்றம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆச்சார்யா போன்ற மூத்தவழக்கறிஞர்கள், கணக்கீடு செய்தலில் தவறு உள்ளது என்று பகிரங்கமாக சொல்லி யுள்ளதால், தீர்ப்புவழங்கிய நீதிபதி கூட அதை ஏற்றுக்கொண்டு அதை எப்படி சரிசெய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார் என்று ஊடகத்தில் வரும்செய்திகள் உண்மையாக இருக்குமானால், நீதிமன்றமே இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு மிகுந்த அக்கறை காட்டுவது ஏன் என்பது புரியவில்லை. இந்த வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய கூடாது. ஹைகோர்ட் தீர்ப்பில் தவறு இருப்பது தெரியவந்தால், சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து (சுமூட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். அவ்வாறு விசாரித்துக்கொள்ளட்டும்"

சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதாக சொல்லும்கருத்து, பாஜகவின் கருத்தல்ல.

மத்தியில் பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு, அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு பாஜக.,வின் அணுகு முறையும், எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்புமே காரணம்.

குழந்தைகள் பணியில் ஈடுபடுவதை பாஜக எதிர்க்கிறது. குறிப்பாக, ஆபத்தான தொழில்களான பட்டாசு, தீப்பெட்டி தயாரித்தல் தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்து வதை தண்டனைக்குரிய குற்றமாகவே கருதுகிறது. ஆனால், பள்ளிவிடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்களின் வீடுகளில் பெற்றோர் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதில் எந்தத்தவறும் இல்லை. ஆனால், சிலர் இதை குலக்கல்வித் திட்டம் என்று திசை திருப்புகின்றனர்.

நிலம் கையகப் படுத்துதல் மசோதா குறித்து தவறான பிரச்சாரத்தை, திட்டமிட்டு எதிர்க் கட்சிகள் செய்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் முதல், இந்தமசோதாவைப் பற்றி மக்கள் சந்திப்புபிரச்சாரம் மூலம் தெளிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

எவ்வளவு விரைவாக நதிகள் இணைக்கப் படுகிறதோ, அவ்வளவு விரைவாக தஞ்சை விவசாயிகள் காப்பாற்றப்படுவர். இதுதான் நிரந்தர தீர்வு" என்றார் கணேசன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.