திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்துச்செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது என சுப்பிரமணியன் சாமி மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தம்பி மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள் நிதியின் திருமண அழைப்பிதழை, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களை நேரில்சந்தித்து மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகின்றார்.

பாஜக தலைவர் சுப்பிர மணியன் சாமியை அவரது சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அவரது தம்பி முக.தமிழரசுவின் மகன் நடிகர் அருள் நிதியின் மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அதனை சுப்பிர மணியன் சாமி பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சாமி கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். அவ்வாறு அவர்கள் மேல் முறையீடு செய்ய தவறினால், நான் அதனைச்செய்வேன்.

என்னைப் பற்றி, பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா புகார்கடிதம் எழுதியுள்ளார். நான் ஒன்றும் பள்ளி மாணவர் அல்ல. நரேந்திரமோடி பிரின்சிபல் இல்லை , மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது என பாராட்டினார்.

மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி, மதுரை மாவட்ட விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான சுப்பிரமணியசாமி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:

இந்திய நாட்டின் வரலாறு அதிகம் மறைக்கப்பட்டு, உண்மை வரலாறு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. முன்பு ஆங்கிலேயர் தயாரித்த பாடத்திட்டம் தான் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதனை மாற்றி இந்தியாவின் முழுமையான வரலாறுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால் அவரது நிலை குறித்து மர்மமாக உள்ளது. அவர் குறித்து மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிடக்கோரி 1991–ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் எந்த அரசும் வெளியிட முன் வரவில்லை.

தற்போது மத்தியில் பாரதிய ஜனதா அரசு உள்ளது. இந்த அரசு நேதாஜி குறித்து மறைக்கப்பட்ட ஆவணங்களை ஆகஸ்ட் 15–ந் தேதிக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு மீது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன்.

ஆவணங்களை வெளியிட்டால், காங்கிரஸ்காரர்கள் வீதியில் நடமாட முடியாது என மோடிநினைக்கலாம். அதனை பொருட்படுத்தாமல் ஆகஸ்ட் 15–ந் தேதிக்குள் மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்து முடிவாகி விட்டது. அதனை ஆகஸ்ட் 31–ந் தேதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ராமநாதபுரத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவது குறித்தும் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.