ஆட்சி மாற்றம் என்று விதையை ஊன்றிய நாம், அது நன்கு வேரூன்றி, செடியாகி மரமாகி, பூத்து, காய்த்து, கனியாகும் வரை காத்திருக்க வேண்டாமா? அதற்குள் அவசரப்பட்டு, நாம் ஏமாந்து விட்டோம்; பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி விட்டார்கள்; வெறும் வாய் ஜாலம்தான், செயலில் ஏதுமில்லை; முன்பிருந்தவர்களுக்கு இதற்கும் வேறுபாடு இல்லை என்றெல்லாம் புலம்புவது சரியாகுமா?

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி தினமலர் வாசகர்களிடையே நடத்திய ஆய்வில், வாசகர்கள் பதிவு செய்த கருத்துக்களைப் பார்த்தபோது மனதில் தோன்றியவைதான் மேலே உள்ள நமது எண்ண ஓட்டம்.

இந்த கருத்துக் கணிப்பு ஆய்வில் உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 419 பேர் பங்கேற்றனர். அவர்களில் 4 ஆயிரத்து 556 பேர் மோடி அரசுக்கு 75க்கு மேல் மதிப்பெண் கொடுத்துள்ளனர். ஆயிரத்து 935 பேர் 60 முதல் 75 வரையும், ஆயிரத்து 474 பேர் 50 முதல் 60 வரையும் ஆயிரத்து 33 பேர் 40 முதல் 50 வரையும் 4 ஆயிரத்து 121 பேர் 40க்கு கீழேயும் மதிப்பெண் அளித்துள்ளனர்.

மேலும் 258 பேர் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அதிலிருந்து சில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு தருகிறோம்:

தேச பக்தன், புதுடில்லி: மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் தொழில் அதிபர்கள் எவரையும் சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. பெரும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவே மோடி செயல்படுகிறார் என்று வாசகர்களில் சிலரும் எதிர்கட்சியினரும் ஓயாமல் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் முந்தைய ஆட்சியில் தொழில் அதிபர்களை பிரதமர் சந்திக்க எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டதென ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? மேலும் அவர் நாட்டைச் சீர்படுத்தும் நோக்குடன் தொலை நோக்கு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார்; கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற அவர் தயாராக இல்லை; இதை புரிந்து கொள்ளாமல், ஓராண்டில் ஏதும் நடக்கவில்லையே என்று கூறுவது, ஆக்கப் பொறுத்த நாம் சற்று ஆறப்பொறுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

மெட்ரோ நகரங்கள் இணைப்பு:

ராமகிருஷ்ணன், ராமேஸ்வரம்: நாட்டின் மெட்ரோ நகரங்களை எக்ஸ்பிரஸ்வே சாலைகள் மூலமும், தனி ரயில் பாதைகள் மூலமும் இணைக்க மோடி திட்டமிட்டு வருகிறார்; சரக்கு போக்குவரத்துக்கென தனி ரயில் பாதை அமைக்கும் திட்டமும் உள்ளது; மாநிலத் தலைநகர்களை முக்கிய துறைமுகங்களுடன் இணைக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது. இப்படி தொலைநோக்குடன் பல திட்டங்களை மோடி தீட்டி வருகிறார். அதற்குள் ஒன்றுமே நடக்கவில்லை என எதிர்கட்சிகள் புலம்புவது அரசியல் நோக்கத்திற்காகத்தான். மரம் காய்த்து கனி தருவதற்குள் அவசரப்பட்டால் ஏதாவது பயன் உண்டா?

ராமசுப்பு, மதுரை: நாட்டின் உயிர்மூச்சு விவசாயம் என்றால், அதன் முதுகெலும்பு தொழில் வளர்ச்சி. அத்தகைய தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமையல்லவா? அவர்களுக்கு தேவைப்படும் வசதியான நிலத்தை கையகப்படுத்தி தருவது குற்றமா? நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வைத்து அரசியல் நடத்துகிறது காங்கிரஸ். உண்மையில் இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் அரசுதான். ஆனால் அதில் சில குறைகளும் பாதகங்களும் இருப்பதாக உணர்ந்த மோடி அரசு அதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதாவது காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இரு மடங்கு தொகையே நஷ்ட ஈடாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது; இதை மோடி அரசு 4 மடங்காக உயர்த்தியுள்ளது. மேலும் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கி இருந்தது காங்கிரஸ் அரசு; அதை மாற்றி மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் எந்த நிலத்தையும் கையகப்படுத்த முடியாதென்ற நிலையைக் கொண்டு வந்தது மோடி அரசு. இதனால் மோடி அரசுக்கு நல்ல பெயர் ஏற்பட்டு விடுமே என்று பொறாமைப்பட்ட காங்கிரஸ், அதை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி:

வெங்கட், சென்னை: ஒரு வருட ஆட்சியில் இந்தியனுக்கு வெற்றி என்னவென்றால், ஊழல் இல்லாமல் இதுவரை ஆட்சி நடந்தது தான். அதற்கு ஒரு பெரிய சபாஷ் போடுங்கள் தயவு செய்து. பாராளுமன்றம் அதிக நாட்கள் நடந்து இருக்கு இந்த முறை. வேலை செய்த நாட்கள் அதிகம். இனி மக்களின் வரிபணத்தை மக்களுக்கே கொடுக்கணும் அதாவது, வரியை குறைக்கவேண்டும். சம்பளம் வாங்குவோர் வரியை குறைக்க வேண்டும்.

முனுசாமி துளசிராமன், வேலூர்: மோடி சாதாரண உடை உடுத்த வேண்டும். ஊர் சுற்றுவதை நிறுத்த வேண்டும்.பாமர மக்களின் மனதில் இடம் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோடி வந்து ஓராண்டில் ஒன்றுமே செய்யவில்லை என்று மக்கள் சொல்லுகிறார்கள். கங்கையை சுத்தம் செய்ய 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரத்தினம், மஸ்கட்: மெகா ஊழல் இல்லை. அரசியல்வாதிகள், ஊழியர்கள் ஊழல் செய்ய கொஞ்சமாவது யோசிக்கிறார்கள்.வெளி நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்தியாவை பற்றி பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியை விட அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் ஓகே. .அயல் நாட்டிலிருந்து மூலதனம் ஓகே.

சாதகமான வெளியுறவு:

நல்லவன், கோல்கட்டா: வங்கதேசம் மட்டுமல்ல. இலங்கையில் இந்தியாவுக்கு சாதகமான அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. மாலத் தீவிலும், நேபாளத்திலும் பல ஆண்டுகளாக இருந்த இந்திய எதிர்ப்பு மறைந்து நட்புறவு மலர்ந்திருக்கிறது. பூடானுடனான உறவு மேலும் வலுப்பட்டிருக்கிறது. சீனாவுடனும் பழைய பகைக்குப் பதிலாக புதிய புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, இப்போது பாகிஸ்தான் தனிமைப்பட்டிருக்கிறது. இத்தனையையும் ஒரே ஆண்டில் சாதித்து முடித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு என்பது மக்கள் மன்றத்தில் ஊடகங்களால் சரியாகப் பதிவு செய்யப்படவும் இல்லை. அரசும் அதுபற்றி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளவும் இல்லை

திருச்சிற்றம்பலம் கென்னடி, சிங்கப்பூர்: இந்திய கலாச்சாரத்தையும் ,இளைஞர்களின் ஆற்றலையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். கட்சியில் அதிகார மையங்கள் வளராமல் தடுத்தார். ஓயாமல் உழைப்பது- இனி வரும் தலைவர்களுக்கு நல்ல பாடமாக அமையும். இது போன்றவைகள் நிறைகள்;

பொறுமை தேவை:

மனுபுத்திரன், சென்னை: கடந்து போன காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களையும், ஊழல்களையும் சரிசெய்யவே இன்னும் 1 வருடம் ஆகும். இதுவரை மோடி அவர்களின் ஆட்சி மிக சிறப்பானதே. இனி வரபோகும் நாட்கள் மிக நன்றாகவே இருக்கும். தேவை நமக்கு பொறுமை. சினிமா, ஐ.பி.எல்., டிக்கெட்டுக்கு பொறுமை காக்கும் இந்தியர்கள் 5 வருட ஆட்சியை ஒரே வருடத்தில் எதிர்பார்க்கும் போக்கு வேதனையானது..உள்நோக்கம் கொண்டது.

சேரன் பெருமாள், ராதாபுரம்: அந்நிய ஊடகங்கள், இந்தியாவை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எண்ணுவதின் விளைவு தான் மோடி எதிர்ப்பு. இந்தியன் தலை நிமிர்ந்து விட்டால் உலகில் பல செல்வாக்குள்ள நாடுகளும் தங்கள் செல்வாக்கை இழக்கும் என்றுதான் திட்டமிட்டு மோடியின் எல்லா திட்டங்களையும் செயலிழக்க வைக்கிறார்கள். இங்குள்ள, நாட்டை பற்றி அக்கறை இல்லாத கட்சிகளும் அவற்றின் தொண்டர்களும் தங்களது சுயநலத்திற்காக துணை போகிறார்கள்.

நீலகண்டன், சென்னை: திரு மோடி அவர்களின் ஆட்சியை பற்றி தவறான கருத்துகளை பதிவு செய்யும் முன் அவரின் செயல் பாடுகள் எப்படி உள்ளது என்று எண்ணி பாருங்கள் . காங்கிரஸ் கட்சியின் ஊழல் அமைச்சரவை மற்றும் அரசியல்வாதிகளின் செயல் பாடுகள் நாட்டிற்கு விளைந்த தீமைகள். அண்டை நாடுகளுடன் என்ன மாதிரியான மரியாதையை நமக்கு இருந்தது என்று நமக்கு நன்றாக தெரியும்.

60 ஆண்டுகால அசுத்தங்கள்:

அருணாச்சலம், சென்னை: எப்படிப்பட்ட நல்ல மனிதர் இந்த பதவியில் வந்தாலும், ஒரே வருடத்தில், 60 வருட ஆட்சியின் அசுத்தங்களை மாற்ற முடியாது. ஆனால், ஓரளவுக்கு வேகத்தில் பாரதத்தின் சுத்தத்தன்மைக்கும், பிற வெளிநாட்டு முதலீடுகளுக்கும், முக்கியத்துவம் கொடுத்தும், அதல பாதாளத்தில் வீழ்ந்த நம் நிதிநிலைமை, பொருளாதாரம், வெளியுறவு தொடர்பு இவைகளை உயர்த்தி வளர்ச்சிப் பாதைக்கு, கொண்டு செல்கிற முயற்ச்சியை நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்.

மஸ்தான் கனி – அதிராம் பட்டினம்: வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லுறாங்களே எதில விலைவாசி குறைஞ்சு இருக்கு. விவசாய உற்பத்தி பெருகிருக்கானு பாருங்க, மீடியாக்கள் தான் வளர்ச்சின்னு சொல்லுதே தவிரே உண்மையில எந்த மாற்றமும் இல்லை, அரசு தான் மாறிருக்குது. ராகுல் போட்ட மார்க்கு சரிதான்.

மேஜிக் நிபுணர் அல்ல:

சஞ்சி, சென்னை: நமது பிரதமர் ஒரு மேஜிக் நிபுணர் என்று நினைத்து கருத்தெழுதும் புண்ணிய ஆத்மாக்களுக்கு …. அரசுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பை வெறும் 20% சுரங்கங்கள் மூலமே 3லட்சம் கோடி உறுதி செய்தது சாதனை இல்லையா …? இதேபோல் அலைக்கற்றையில் 1 லட்சம் கோடியை உறுதிசெய்துள்ளது சாதனையில்லையா …. ?

வி.ஷியாம் சுந்தர், பெங்களூரு: நான் இந்த அரசுக்கு 70 மார்க்ஸ் கொடுப்பேன். மோடி வெளிநாட்டு பயணம் விமர்சனம் செய்ய படுகிறது. மோடி மேல் நிறைய குற்றச்சாட்டுகள் எதிர் கட்சிகளால் எழுப்பபட்டிருந்தது; அதுவும் வெளிநாடுகளில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைத்திருந்தது. மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. இந்த நிலைமையில் அவர் இந்தியாவின் பிரதமராக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தன்மேல் ஏற்பட்ட இந்த அவநம்பிக்கையை மாற்றி முழு நம்பிக்கை பெறுவது அவசியம். இதை அவர் முன்னுரிமையாக எடுத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ராஜா, திருப்பூர்: 100க்கு 100 தரலாம். ஊழல் இல்லா ஆட்சி. ஜன தன் யோஜனா, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற வளர்ச்சி மிக்க திட்டங்கள். நாட்டை விட்டு சென்ற இந்தியா மக்கள் கிட்ட தொழில் வளர்ச்சிக்கு முதலீடு. வெளிநாடு வாழ் இந்தியா மக்கள் முதலீடு செய்தால் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

நதி நீர் இணைப்பு:

ஈவி ஸ்ரீநிவாசன், மஸ்கட்: நில மசோதா நிறைவேறாத நிலையில் நதி நீரை எப்படி இணைப்பீர்கள்? நதி நீர் இணைப்பினை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியும் அதன் நிழல் கட்சிகளும் நில மசோதாவை எதிர்கின்றனர். நீர்வளம் வற்றிய நிலையில் இந்தியா நதிகள் இணைக்கப்படாவிட்டால் விவசாயம் நிச்சயமாக அழியும்.

ஆர்கே நடராஜ், மதுரை: ஆதார் அட்டை திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தாலும், அதை தொடர செய்து, பல்வேறு துறைகளிலும் ஆதார் பயன்படும்படி செய்கிறார்கள். நிலக்கரி ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் கோடி கணக்கில் நடந்தது, ஆனால் மோடி ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கு ஏலம் போனது. குஜராத்தை முதல் மாநிலமாக கொண்டு வந்த மோடியால் நிச்சயம் இந்தியாவை முன்னுக்கு கொண்டு வர முடியாதா?

வித்தியாசம் இல்லை:

எஸ் கோபிநாதன், சென்னை: பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மீட்க முடியாமல் போன ஒரு விஷயமே இவர்களுக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்டி விட்டது. வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்காததும் ஒரு காரணமாக சொல்லலாம். .

பி.கவுரி, சென்னை: 100/100 சுதந்திரத்திற்கு பிறகு ஒரு நல்ல பிரதமர் மோடிஜி . 60 வருடம் உருப்படாமல் இருந்த நமதுநாட்டை உலகமே திரும்பி பார்க்க வைத்து உள்ளார். கொஞ்சம் டைம் கொடுங்கள். நிச்சயம் சாதிப்பார். சாதிக்க பிறந்தவர் 100 என்ன அதற்கு மேலே கொடுக்கலாம்.

நன்றி ; தினமலர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.