"பணக்காரர்களின் அரசு என்று எமது அரசின் மீது காங்கிரஸார் விமர்சனம் எழுப்புகின்றனர்; அவர்கள் நடத்திய "பணப் பெட்டி' (ஊழல்) அரசைவிட இந்த அரசு மேலானது' என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

"மத்திய அரசு பணக்காரர் களுக்கானது' என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக, டிரிபியூன் நாளிதழுக்கு பிரதமர் அளித்த சிறப்பு பேட்டி:

மத்திய அரசு பணப்பெட்டி (சூட்கேஸ்) அரசு என்பதை விட பணக்காரர்களுக்கான (ஷூட்பூட்) அரசு என்பது ஏற்கக்கூடியது தான். நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் குறித்த நினைப்பு திடீரென இப்போதுதான் வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தொலை நோக்குப் பார்வையில்லாத கொள்கைகளால் தான் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர்.

நிலக்கரிச்சுரங்க ஊழல், அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றால் ஏழைகளா பயனடைந்தார்கள்? இவற்றில் பயனடைந்தவர்கள் யாரென்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட சில முதலீட்டாளர்களும், குத்தகைக் காரர்களுமே பயனடைந்தனர் என்றார் அவர்.

மத வன் முறையை சகித்து கொள்ள முடியாது: "சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறும் பாஜக தலைவர்களை உங்களால் கட்டுப் படுத்த இயலவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப் படுகிறதே' என்ற கேள்விக்கு மோடி அளித்த பதில்:

எந்தவொரு மதத்துக்கு எதிராகவும் வன்முறை நிகழ்வதை சகித்துக்கொள்ள முடியாது. ஜாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு 125 கோடி மக்களில் ஒவ்வொருவரின் நலனுக் காகவும் நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறோம்.

நாட்டில் அனைத்து நம்பிக்கை களுக்கும் சம உரிமை உள்ளது; சட்டத்தின் முன் சம உரிமை என்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திலும் சம உரிமை உண்டு.

அனைத்து குடிமக்களுக்கும் மத சுதந்திரத்தை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. அதில் சமரசத்துக்கு இடமில்லை.

ஒரே ஓய்வூதியம்: ராணுவத்தினருக்கு "ஒரேதகுதி ஒரே ஓய்வூதியம்' என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

எமது அரசு 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க போகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

"நிலம் கையக மசோதா, எனக்கு வாழ்வா – சாவா பிரச்னையல்ல; பாஜக.,வின் செயல் திட்டத்திலோ, மத்திய அரசின் செயல் திட்டத்திலோ அந்தமசோதா இடம் பெறவில்லை' .

நிலம் கையகமசோதாவுக்கு காட்டப்படும் எதிர்ப்பு நியாயமற்றது, துரதிருஷ்டவசமானது. மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் அந்தச்சட்டத்தில் நாங்கள் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

இதனால் நீர்ப்பாசனம், வீட்டு வசதி, மின்சாரத்துறை, சமூக உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கிராமப்புற மக்கள் பயனடையமுடியும். இந்தமசோதா தொடர்பாக ஆலோசனை நடத்தக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது என்பதே எங்களது விருப்பம். அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும், அவர்களது ஆலோசனைகளை ஏற்பதற்கும் அரசு தயார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.

தேசநலன் கருதி இது போன்ற பிரச்னைகளில் அரசியல் கணக்குகளை தாண்டி அனைவரும் ஆதரவு அளிப்பர் என நம்புகிறேன் என்றார் மோடி.

Leave a Reply