தக்கலை அண்ணாசிலை முன்பு குமரிமாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் ஓராண்டுசாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழல் நிறைந்து காணப்பட்டது. 1969ல் இந்திராகாந்தி ஆட்சியில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது. இதனால் மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் 1969க்கு பின்பு 2014 வரை வங்கியின்பயன் சாதாரண மக்களை சென்றடையவில்லை.

நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு புதியவங்கி கணக்கு திட்டத்தை அறிவித்தார். இதில் 15 கோடி பேர் இணைந்துள்ளனர். மோடியின் வங்கிகணக்கு திட்டம், விபத்துகாப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு, பென்சன் திட்டங்களுக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வியாபாரிகளை கந்துவட்டி கும்பலிடம் இருந்து மீட்க முத்ராவங்கி திட்டம் வர உள்ளது. ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கும் திட்டத்தின் மூலம் நகரபகுதிகளில் 4 கோடி மக்களும், கிராமங்களில் 2 கோடி மக்களும் பயன்பெறுவார்கள். எனது துறைமூலம் துறைமுகங்கள் புதியதாக உருவாக்கப்பட உள்ளது.

சென்னை துறை முகம் நஷ்டத்தில் இயங்கிவந்தது. இந்த ஆண்டில் ரூ.5 கோடி லாபம் ஈட்டி உள்ளது. குளச்சல் துறை முகத்தை மேம்படுத்த முடியுமா? முடியாதா? என்பது 15 நாட்களில் தெரிந்துவிடும். குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்க 400 ஏக்கர் இடம்தேவை. இது தொடர்பாக மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோப்பு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் 80 நகரங்களில் பெண்குழந்தைகளே பிறக்கவில்லை. இதற்குகாரணம் பெண் சிசு கொலையாகும். பெண் குழந்தைகளை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசு இலவசம் மூலம் ஏழைமக்களை ஏமாற்றி வருகிறது. மது மூலம் மக்களை அடிமைப் படுத்துகிறது. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவை. 2016 சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தே.ஜ.கூட்டணி ஆட்சியை பிடிக்கும். குமரிமாவட்டத்தில் உள்ள 6 சட்ட சபை தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.